சசிகலா எம்.ஏ. தேர்வு எழுதுகிறாரா?!
By Aruvi | Galatta | Mar 15, 2021, 10:30 am
சசிகலா பெங்களூரு பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி திட்டத்தில் எம்.ஏ. கன்னட படிக்க விண்ணப்பித்திருந்த நிலையில், அதற்கான தேர்வும் தற்போது வர உள்ளன.
சசிகலா அ.தி.மு.க வின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்று, முதலமைச்சராகவும் முடிசூட நினைத்த நேரத்தில் தான் சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை விதித்துத் தீர்ப்பு வந்தது. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று 4 ஆண்டுகள் சிறையில் இருந்த சசிகலா, கடந்த ஜனவரி மாதம் விடுதலை ஆனார். இதற்கிடையில், கொரோனா தொற்றுக்கு ஆளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பூரண குணமடைந்த நிலையில் பெங்களூரு தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி ஒரு வாரமாக ஓய்வெடுத்த நிலையில், கடந்த மாதம் சென்னை திரும்பினார்.
அதன் தொடர்ச்சியாக “அரசியலை விட்டு ஒதுங்குகிறேன். தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்” என்று, சசிகலா அறிக்கை வெளியிட்டு, சற்று விலகி இருந்தாலும், சசிகலா சிறையில் இருந்த போது கன்னடம் எழுதவும், படிக்கவும், பேசவும் கற்றுக்கொண்டார்.
அப்போது, சசிகலா பெங்களூரு பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வித் திட்டத்தில் எம்.ஏ. கன்னட படிக்க விண்ணப்பித்து இருந்தார். அதன் படி, அவர் எம்.ஏ. கன்னடம் படித்து வந்தார்.
ஆனால், கடந்த ஆண்டு எம்.ஏ. கன்னடம் தொடர்பான தேர்வை அவர் எழுத இருந்தார். ஆனால், கொரோனா பரவல் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் தேர்வு நடத்த முடியவில்லை. இதனால், சசிகலாவால் தேர்வு எழுத முடியாமல் போனது.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான தேர்வு தேதி தற்போத அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், “சசிகலா எம்.ஏ. கன்னட தேர்வை எழுதுவாரா?” என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக, பெங்களூரு பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்குனர் பேராசிரியர் மைலாரப்பா செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது, “ சசிகலாவுக்கு கன்னடம் கற்கும் ஆர்வம் இருந்தது” என்று, குறிப்பிட்டார்.
“அதனால் தான், நாங்கள் சிறைக்கு சென்று அவரை எம்.ஏ. படிப்பில் சேர்த்தோம் என்றும், அவர் தேர்வு எழுத இருந்த நேரத்தில் தான், கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் தேர்வு நடத்த முடியவில்லை என்றும், ஆனால் தற்போது அந்த படிப்புக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது” என்றும், கூறியுள்ளார்.
“அதன் படி, வருகிற 24 ஆம் தேதி தேர்வு தொடங்குகிறது. இதில் 257 கைதிகள் கலந்து கொண்டு தேர்வு எழுத உள்ளனர். ஆனால், சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி சென்று விட்டார். தற்போது சென்னையில் இருக்கும் அவர் தேர்வு எழுத வருவது சந்தேகம் தான்” என்றும், பெங்களூரு பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்குனர் பேராசிரியர் மைலாரப்பா தெரிவித்துள்ளார்.
தற்போது, அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கும் சசிகலா, எம்.ஏ. கன்னட தேர்வு எழுதினால், அது தமிழக அரசியலில் பேசும் பொருளாக மாராலாம். அதனால், எம்.ஏ. கன்னட தேர்வு எழுதுவாரா? மாட்டாரா? என்பது சசிகலாவிற்கே அது வெளிச்சம்!