இந்தத் தேர்தலில் திமுகவின் உச்ச நட்சத்திரப் பேச்சாளர் உதயநிதி ஸ்டாலின்தான்.
அவரது எளிமையான அணுகுமுறையும் எளிமையான பேச்சும் பொதுமக்களை குறிப்பாகப் பெண்களை வெகுவாகக் கவர்கிறது. அவரது நோக்கமும் அதுதான். தன்னுடைய பிரச்சாரத்தில் தீவிரமான அரசியல் எல்லாம் அவர் பேசுவதில்லை.
சின்னச் சின்ன விஷயங்கள். சாதாரண மக்களுக்கு குறிப்பாகப் பெண்களுக்கு எளிதில் புரியும் விஷயங்கள்தான் அவரது பேச்சில் பெரும்பாலும் இடம் பெற்றிருக்கிறது.
திமுகவை எதிர்த்து பாஜகவும் அதிமுகவும் தங்களுடைய தீவிரப்பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. எடப்பாடி பழனிச்சாமியும் அண்ணாமலையும் தங்களின் பேச்சில் திமுகவைச் சாடும் போது உதயநிதி பெயரைச் சொல்லாமல் விடுவதில்லை.
ஏற்கனவே சனாதன விவகாரத்தில் அகில இந்திய அளவில் அவரை அவரது எதிரிகள்தான் பிரபலப்படுத்தினார்கள். இப்போது தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தல் பிரச்சாரத்திலும் உதயநிதி அவரின் எதிர்க்கட்சியினரால் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமையாக மாறி இருக்கிறார்.
உதயநிதி இதுவரையில் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட தொகுதிகளைச் சுற்றி வந்து விட்டார். எல்லா இடங்களிலும் வேன் பிரச்சாரம்தான். கட்சிக்காரர்கள் கூட்டும் கூட்டத்தைத் தாண்டி பொதுமக்களின் கூட்டம் அதிகமாகக் கூடுவதுதான் அவரது பலம்.
ஒரு கூட்டத்திற்கு வந்து விட்டு, “எவ்வளவு நேரமாகக் காத்திருக்கிறீர்கள்?” என்று கேட்கிறார்.
“மூன்றரை மணியில் இருந்து காத்திருக்கிறோம்” என்று கூட்டத்தில் ஒருவர் சொல்கிறார். அதற்கு சிரித்துக் கொண்டே “உங்களை யார் மூன்றரை மணிக்கு வரச் சொன்னது?” என்கிறார். பக்கத்து வீட்டுக்காரர் போல, நம்முடைய குடும்பத்தில் ஒருவரைப் போல, “வழி எல்லாம் வர வேற்பு அதை முடித்து விட்டு வருவதற்கு கொஞ்சம் நேரமாகி விட்டது மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி விட்டுப் பேச்சை ஆரம்பிக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
அவரது எல்லாப் பேச்சிலும் தவறாமல் ஒரு விஷயத்தை வலியுறுத்துகிறார். அது திமுக இந்த மூன்று ஆண்டு காலத்தில் செய்த சாதனைகள் அல்லது நிறைவேற்றிய வாக்குறுதிகள்.
வெறுமனே எதிரிகளைக் குறை சொல்வது மட்டுமல்ல. நாங்கள் இதைச் செய்திருக்கிறோம். இதைச் செய்வோம் என்கிற ஆக்கப் பூர்வமான பிரச்சாரம்தான் மக்கள் மத்தியில் எடுபடும் என்பது உதயநிதிக்குத் தெரியும். அது அவரின் பாணி மட்டுமல்ல. திமுகவின் பாணி.
அண்ணா வட மொழி வேண்டாம் என்பார். தமிழ் வேண்டும் என்பார். ஒருவரை ஒருவர் எதிரெதிரே பார்த்துக் கொண்டால் நமஸ்காரம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதை வணக்கம் என்று மாற்றினார் அண்ணா.
இப்படித்தான் ஒன்றை வேண்டாம் என்று சொல்வதோடு நிறுத்துவதில்லை. வேண்டுவது எது என்பதையும் சொல்வதுதான் திமுகவின் பாணி.
“எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெறும் செங்கல்லை நட்டு வைத்து விட்டுப் போய் விட்டார்கள். அந்த ஒற்றைச் செங்கல்லையும் நான் தூக்கி வந்து விட்டேன்” என்று ஒன்றிய அரசு செய்யத் தவறியதை நகைச்சுவையாகச் சுட்டிக் காட்டுவதோடு நிறுத்தவில்லை உதயநிதி ஸ்டாலின்.
“சென்னையில் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையை ஒரு வருடத்தில் கட்டி முடிக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்து, பத்தே மாதத்தில் கட்டி முடித்து மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்து விட்டார் முதலமைச்சர்” என்று சுட்டிக்காட்டுகிறார்.
“இதுதான் திமுக அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம்” என்கிறார் உதயநிதி.
செல்லும் இடங்களில் எல்லாம் அவர் மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து பற்றிப் பேசத் தவறுவதில்லை.
“பிங்க் பஸ்சுக்கு நீங்கள்தான் ஓனர். எங்கே வேண்டுமானாலும் நீங்கள் ஏறிக் கொள்ளலாம் எங்கே வேண்டுமானாலும் இறங்கிக் கொள்ளலாம்” என்று அவரின் பேச்சைக் கேட்க வந்த தாய்மார்களைப் பார்த்துச் சொல்கிறார் உதயநிதி. “ஆமாம் உண்மைதானே” என்று கூட்டம் கேட்கும் பெண்களைச் சிந்திக்க வைக்கிறார்.
பிரதமர் மோடி பிரச்சாரம் செய்யும் போது திமுகவை விமர்சனம் செய்ததுதான் அதிகம். பத்தாண்டு காலத்தில் ஒன்றிய பாஜக அரசு என்ன செய்தது? குறிப்பாக தமிழ்நாட்டிற்கு என்ன செய்தது? என்று தமிழ்நாட்டிற்குத் திரும்பத் திரும்ப வந்த மோடி மக்கள் மனதில் தைக்கும் படி எதையும் சொல்லவில்லை. ஆனால் உதயநிதி தன்னுடைய எல்லாப் பிரச்சாரக் கூட்டத்திலும் திமுக செய்த சாதனைகளைச் சொல்லத் தவறுவதே இல்லை.
“பெண்கள் ஒரு காலத்தில் வீட்டை விட்டே வெளியே வரக் கூடாது என்று கட்டுப்பாடு வைத்திருந்தார்கள். இன்றைக்குப் பெண்கள் படிக்க வருகிறார்கள். வேலைக்குச் செல்கிறார்கள். இந்தியாவிலேயே வேலைக்குச் செல்லும் பெண்களின் சராசரி தமிழ்நாட்டில்தான் அதிகம்” என்று புள்ளி விபரம் சொல்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
“அதற்கு பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் திராவிட இயக்கமும்தான் காரணம்” என்று அவர் சொல்லும் போது கூட்டம் கேட்கும் பெண்கள் யோசிக்கிறார்கள்.
“அரசுப் பள்ளியில் படித்த பெண்கள் கல்லூரிக்குச் சென்றால் அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை கொடுக்கிறோம். அதில் 3 லட்சம் பெண்கள் மாதா மாதம் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள்” என்று உதயநிதி சொன்னால் அதை மறுக்க முடியாமல் திணறுகிறார்கள் எதிர்க்கட்சியினர்.
திமுக நிறைவேற்றிய இந்தச் சாதனைகளை நேரடியாக எதிர்க்க முடியாமல் திமுக வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று பொத்தாம் பொதுவாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டும் போது அது பெண்கள் மத்தியில் எடுபடாமல் போகிறது.
அதைப் போலவே மகளிர் உரிமைத் தொகை. “1 கோடியே 16 லட்சம் பெண்கள் மாதம் 1000 ரூபாய் பெறுகிறார்கள்” என்று உதயநிதி தான் பேசும் எல்லாக் கூட்டத்திலும் தவறாமல் சொல்கிறார்.
“எனக்கு வரவில்லை” என்று கூட்டத்தில் யாராவது ஒருவர் சொல்வதற்கு முன் தானே முன்வந்து, “ஆமாம் சில குறைபாடுகள் இருக்கிறது” என்கிறார் உதயநிதி. அது அவரின் மீதான நம்பகத் தன்மையைப் பெண்கள் மத்தியில் வளர்க்கிறது.
“ஒரு கோடியே 60 லட்சம் பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள். அதில் 1 கோடியே 16 லட்சம் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வருகிறது. மீதமுள்ள பெண்களுக்கும் வெரிஃபை செய்து தகுதியுள்ள அனைவருக்கும் தேர்தல் முடிந்ததும் கண்டிப்பாக அந்தத் தொகை கிடைக்க ஏற்பாடு செய்வேன்” என்று வாக்குறுதி அளிக்கிறார் உதயநிதி.
“அந்தத் துறைக்கு நானும் நிதியமைச்சரும்தான் பொறுப்பு எனவே கண்டிப்பாக நிறைவேற்றுவோம்” என்று சொல்லி நம்பகத்தன்மையை அதிகரிக்கிறார்.
எல்லாத் தேர்தலிலும் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் சைலண்ட் ஓட்டர் என்று சொல்லப்படும் பெண்கள்தான். அவர்கள்தான் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பவர்கள்.
சமூக வலைத்தளங்களில் இன்ஸ்டாகிராமில், யூட்யூபில் தொலைக்காட்சி விவாதங்களில் அவர்களை நாம் பார்க்க முடியாது.
அந்த சமூக வலைத்தளங்களால் அவர்களிடம் செல்வாக்கு செலுத்தவும் முடியாது.
அந்த வாக்காளர்களைத்தான் உதயநிதி ஸ்டாலின் தனது பிரச்சாரத்தில் தவறாமல் குறி வைக்கிறார்.
வச்ச குறி தப்பாது போலத்தான் தெரிகிறது.