புதிய உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும்! - தமிழக அரசு
By Aruvi | Galatta | Apr 20, 2020, 10:11 am
புதிய உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், தமிழகம் உட்பட நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
இதனிடையே, கடந்த வாரம் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 20 ஆம் தேதி முதல் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாகவும், அதன்படி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு சில சலுகைகள் அளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டு இருந்தது.
ஆனால், தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் குறையாமல், அதன் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், புதிய உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசு கடந்த 15 ஆம் தேதி வெளியிட்ட ஆணையின்படி, 'ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப் பிறகு எந்தெந்த தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பதைப் பற்றி மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்கவேண்டும்' எனத் தெரிவித்து இருந்தது. இதற்கென மாநில அரசு ஒரு நிபுணர் குழுவை நியமித்தது.
இந்த குழு, தன் முதல் கட்ட கூட்டத்தை நடத்தி, தன்னுடைய ஆலோசனைகளை இன்று அறிக்கையாக வழங்க உள்ளன.
இந்த நிபுணர் குழுவின் ஆலோசனைகளை ஆராய்ந்து முதலமைச்சர் முடிவெடுக்க உள்ளார். இதுகுறித்து தமிழக அரசு ஆணைகள் வெளியிடும் வரை, தற்போது உள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.