தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிக்கப்பட்டு, வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல், நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இவற்றைக் கட்டுப் படுத்த மத்திய - மாநில அரசுகளால் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டு வருகிறது. 

அதன் படி, தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 19 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் தான், தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு தளர்வுகள் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன் படி, வரும் 31 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

இந்த முறை ஊரடங்கு நீட்டிப்பிலும் சில முக்கிய செயல்களுக்கு அனுமதியும், சிலவற்றுக்குத் தடையும் அளிக்கப்பட்டு உள்ளது. 

இது தொடர்பாக தமிழக அரசு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 

- திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள், பொழுது போக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மற்றும் உயிரியல் பூங்காக்களுக்குத் தடை வழக்கம் போல் இப்போதும் தொடர்கிறது.

- கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாகத் திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும், கூடுதலாகத் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளன.

- அதே போல், இறுதிச் சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்கிற பழைய கட்டுப்பாடுகள் தொடர்கிறது.

- கொரோனா நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர, அனைத்து பகுதிகளிலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அப்படியே இப்போதும் அனுமதிக்கப்படுகிறது.

* தொழிற் பயிற்சி பெறும் மாணவர்களின் வேலைவாய்ப்பினைக் கருத்தில் கொண்டு அனைத்து தொழிற் பயிற்சி நிலையங்கள், தட்டச்சு-சுருக்கெழுத்து, பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50 சதவிகித மாணவர்களுடன், சுழற்சி முறையில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

- பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்டத் தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாகப் பணிகளும் தொய்வின்றி நடைபெறுவதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து  பணிபுரிய அனுமதிக்கப்பட்டு உள்ளது.

- மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து (புதுச்சேரி நீங்கலாக) மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்து தடை விதிக்கப்பட்டு உள்ளது.

- குறிப்பாக, கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.

- தட்டச்சு - சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் ஒரே நேரத்தில் 50 சதவீத மாணவர்களுடன், சுழற்சி முறையில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

- குளிர் சாதன வசதி பயன்படுத்தப்படும் இடங்களில் கதவுகள், ஜன்னல்கள் திறக்கப்பட்டு போதுமான காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது என்றும், தடையும் தொடர்கிறது.