கோட்டை விட்ட அரவிந்த் கெஜ்ரிவால்!
By Aruvi | Galatta | 11:22 AM
சாலை பேரணியால் கலந்துகொண்டதன் காரணமாக, அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று வேட்புமனுவைத் தாக்கல் செய்யாமல் கோட்டை விட்டார்.
டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி, தேர்தல் நடைபெறுகிறது. இங்கு மட்டும் மொத்தம்
70 சட்ட மன்ற தொகுதிகளில் உள்ளன.
இந்நிலையில், தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே, வேட்பு மனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், வேட்பு மனுவைத் தாக்கல் செய்யத் திட்டமிட்டிருந்தார்.
அப்போது, அவர் தொண்டர்கள் புடை சூழ வேட்பு மனுவைத் தாக்கல் செய்யப் புறப்பட்டார். டெல்லி வால்மீகி கோயிலிலிருந்து, அனுமான் கோயில் வரை அவர் தொண்டர்கள் புடை சூழ, ஊர்வலமாகச் சென்றார்.
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடை சூழ, நீண்ட நேரமாக ஊர்வலம் மெதுவாகச் சென்றதால், அரவிந்த் கெஜ்ரிவால் வேட்பு மனுத்தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
குறிப்பாக, மாலை 3 மணிக்குள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், தொண்டர் படையுடன், வேட்பு மனுத் தாக்கல் செய்யப் பேரணியாகச் சென்றால், மாலை 3 மணிக்கு பிறகே, வேட்பு மனுத்தாக்கல் செய்யும் அலுவலகத்தைச் சென்றடைய முடிந்தது. இதனால், தேர்தல் அலுவலகம் பூட்டப்பட்டுக் கிடந்தது.
இதன் காரணமாக, வேட்பு மனுத்தாக்கல் செய்யாமலேயே அரவிந்த் கெஜ்ரிவால் திரும்பிச் சென்றார். இதனால், அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு, வேட்புமனுவை அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தாக்கல் செய்கிறார்.