பெண்களை ஆபாசப் படம் எடுத்து மிரட்டிய காசி வழக்கில் திடீர் திருப்பம்.. காசியின் தந்தை அதிரடி கைது!
By Aruvi | Galatta | Nov 21, 2020, 04:16 pm
பெண்களை ஆபாசப் படம் எடுத்து மிரட்டிய நாகர்கோவில் காசி வழக்கில் திடீர் திருப்பமாக, காசியின் தந்தை அதிரடியாகக் கைது செய்யப்பட்டு உள்ளார்.
சென்னையில் பெண் டாக்டர் உள்பட தமிழகம் முழுவதும் பல பெண்களை ஏமாற்றி ஆபாசப் படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில், நாகர்கோவில் காசியை போலீசார் அதிரடியாகக் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கின் தொடக்கத்தில், காதலன் மன்தமன் காசியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஏராளமான பெண்களின் ஆபாசப் படங்கள் மற்றும் மெம்மரி கார்ட், காசி பயன்படுத்தி வந்த செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பல பொருட்களை போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். காசியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்களும் தற்போது வரை ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகிக்கொண்டே இருக்கின்றன.
இந்த வழக்கில் காசியின் நண்பன் டேசன் ஜினோவை போலீசார் கைது செய்து, அவனிடம் விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின்படி, காசியின் நெருங்கிய கூட்டாளியான தினேஷ் பற்றிய பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தது. இதனையடுத்து, அவனும் கைது செய்யப்பட்டு, விசாரணைக்குப் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டான். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்களும் வெளியாகின.
கடந்த சில வாரங்களுக்கு முனபு கூட, “பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றிய காசி மீது சென்னையைச் சேர்ந்த மேலும் ஒரு கல்லூரி மாணவி பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். சிபிசிஐடி போலீசாரிடம் அளிக்கப்பட்ட இந்த புகாரின் அடிப்படையில், காசியின் மீது பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி அளித்த தகவலின் படி,
பெண்களை எப்படியெல்லாம் பயன்படுத்தி, ஆபாசப் படங்கள் எடுக்கப்பட்டது போன்ற உண்மைகள் தெரிய வந்தது. அதன்படி, காசி தான் அணிந்திருக்கும் கை கடிகாரத்தில் உள்ள கேமராவை பயன்படுத்தி, பல பெண்களைத் தனது காதல் வலையில் வீழ்த்தி, ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்தது தெரிய வந்தது.
அதன் தொடர்ச்சியாக, சென்னையைச் சேர்ந்த ஒரு பெண் பேராசிரியை ஒருவரும், காசியின் வலையில் சிக்கி உள்ளது தெரிய வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, காசியின் செல்போன் சிம்கார்டு, போன் மெமரி, கூகுள் ஸ்டோர் உள்ளிட்டவற்றில் 17 ஆயிரம் எண்கள் இருந்துள்ளன. இதில் பல எண்கள் அழிக்கப்பட்டுள்ளது.
ஆனால், காசியின் தொடர்பிலிருந்த செல்போன் எண்களில் போலீசார் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் பல அதிர்ச்சி தகவல்களை அந்த பெண்கள் கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களை பெரும்பாலும் காரில் வைத்தே காசியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும், போலீசாரின் விசாரணையில் ஒவ்வொன்றாகத் தெரிய வந்துள்ளது.
தற்போது, இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக, காசியின் ரகசிய லேப்டப்பில் தான் அனைத்து வீடியோக்களும் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, அந்த ரகசிய லேப்டாப்பை போலீசார் தேடிய நிலையில், குறிப்பிட்ட அந்த ரகசிய லேப்டாபானது, ஒரு கோழிப்பண்ணையில் இருந்து மீட்கப்பட்டது. ஆனால், மீட்கப்பட்ட அந்த லேப்டாப்பில் இருந்த வீடியோ ஆதாரங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு இருந்தன.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், காசியின் தந்தை அந்த லேப்டாப்பில் இருந்த வீடியோ ஆதாரங்களை அழித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, காசி மீது பதியப்பட்ட 4 பெண்கள் ஏமாற்று வழக்கில் ஆதாரங்களை
அழித்ததாக அவரது தந்தையின் பெயரையும் சிபிசிஐடி போலீசார் தற்போது சேர்த்துள்ளனர். இதனால், காசியின் தந்தையை போலீசார் அதிரடியாகக் கைது செய்து, 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே போல், காசி வழக்கில் விசாரணை மேற்கொண்டு வரும் தனிப்படை போலீசார், சம்மந்தப்பட்ட லேப்டாப்பில் அழிக்கப்பட்ட ஆதாரங்களை மீட்கும் முயற்சியில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால், காசி வழக்கு, மீண்டும் சூடுபிடித்து உள்ளது.