``யாரிடமும் ஒரு மாதத்திற்கு போதுமான கையிருப்பு இல்லை!" - கரூர் எம்.பி ஜோதிமணி
By Nivetha | Galatta | Nov 19, 2020, 08:20 pm
சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லட்சுமி விலாஸ் வங்கியில், கடந்த சில ஆண்டுகளாகவே வர்த்தக ரீதியாக பிரச்னையை எதிர்கொண்டு வருகின்றது. சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்குக் கடன் வழங்கிக் கொண்டிருந்த இவ்வங்கி, பெரு நிறுவனங்கள் துறைக்கும் கடன் வழங்கி வாராக் கடன் பிரச்சினையில் சிக்கியுள்ளது.
வாராக் கடன் பிரச்னை மட்டுமல்லாமல் லட்சுமி விலாஸ் வங்கியின் டெபாசிட் தொகையும் குறையத் தொடங்கியிருக்கிறது. இவ்வங்கியின் நிலையான வைப்புத் தொகை ரூ.31,000 கோடியிலிருந்து ரூ.21,000 கோடியாகக் குறைந்துவிட்டது. இதனால் கடந்த 2019 செப்டம்பர் மாதத்தில் லட்சுமி விலாஸ் வங்கியை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் கொண்டு வந்தது மத்திய ரிசர்வ் வங்கி. இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் வங்கிகள், ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் பெரிய கடன்களை வழங்கவோ அல்லது பெரிய டெபாசிட் தொகையைப் பெறவோ முடியாது. இந்த வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இதுபோன்ற சூழலில் மத்திய அரசு நேற்று முன்தினம் (நவம்பர் 17) வெளியிட்ட அறிவிப்பில், ``வருகிற டிசம்பர் 16ஆம் தேதி வரையில் லட்சுமி விலாஸ் வங்கியை மொரட்டோரியத்தின் கீழ் கொண்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், லட்சுமி விலாஸ் வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் ஒரு மாதத்துக்கு அதிகபட்சமாக ரூ.25,000 மட்டுமே வித்டிரா செய்ய முடியும். அதைத் தாண்டி எடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவச் செலவுகள், கல்விச் செலவு, திருமணச் செலவு போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்குப் பணம் எடுப்பதாக இருந்தால் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்று 25,000 ரூபாய்க்கு மேல் எடுக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் ரிசர்வ் வங்கி தரப்பில், ``லட்சுமி விலாஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பயப்பட தேவையில்லை. வாடிக்கையாளர்களின் பணத்தை திருப்பி அளிப்பதற்கு வங்கியில் பணம் உள்ளது" என கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது, கரூர் எம்.பி.ஜோதிமணி, ``மக்கள் யாரிடமும் ஒரு மாதத்திற்கு போதுமான கையிருப்பு இல்லை!" என்று கூறியிருக்கிறார்.
கரூரை பொறுத்தவரை, லட்சுமி விலாஸ் வங்கியை நம்பியிருக்கும் கொசுவலை, ஜவுளித் தொழில், பஸ்பாடி கட்டும் தொழில் நிறுவனங்களின் வர்த்தகம் என பல வியாபரங்களும் தற்போது பாதிப்பை சந்தித்து வருகிறது. வர்த்தக ரீதியான பின்னடைவு, வியாபாரிகள், கரூர் வர்த்தகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுத்தியுள்ளது. மறுபக்கம் மத்திய நிதி அமைச்சகம் இந்த கடும் நிதி நெருக்கடியை சமாளிக்க பல்வேறு உத்தரவுகளைப் தொடர்ந்து பிறப்பித்து வருகிறது.
அவற்றை கருத்தில்கொண்டுதான் கரூர் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோதிமணி, செய்தியாளர்களை சந்தித்தது பேசினார். அப்போது அவர் கூறியதாவது,
``கரூரில் பேருந்து கட்டுமானம் , நிதி நிறுவனங்களும், ஜவுளி ஏற்றுமதி தொழில்களும் ஒன்றுக்கொன்று ஆதரவாக நின்று வளர்ந்தவை. ஒரு சிறிய நகரத்தில் இருந்து வங்கியை உருவாக்கியவர்களின் கனவு, தொலைநோக்குப் பார்வை, விவசாயிகள், தொழிலாளர்கள் தொழில்துறையினரின் பங்களிப்பில் உருவான வங்கியின் இன்றைய வர்த்தகத் தடை என்ற நிலை வருத்தமளிக்கிறது.
நிறுவனங்கள், வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் பெருமளவில் லக்ஷ்மி விலாஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள நிலையில் முதலில், ஒரு நாளைக்கு 25,000 ரூபாய் எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இன்றோ, வாடிக்கையாளர் வங்கிக்கு சென்றபோது நடப்புக் கணக்குகள் மொத்தமாக முடக்கப்பட்டு மேலும் ஆன்லைன் பண பரிவர்த்தனை, NEFT, RTGS ஆகியவையும் முடக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் மூலமே வரவு, செலவு செய்வதாலும், பொருளாதார மந்தநிலை காரணமாகவும் யாரிடமும் ஒரு மாதத்திற்கு போதுமான கையிருப்பு இல்லை.
பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி மற்றும் மத்திய அரசின் உதவியின்மையால் கரூரில் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்படைந்து பல நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டது. இந்நிலையில் இந்த நடவடிக்கையானது தொழில்துறைக்கு மேலும் பல அழுத்தம் கொடுக்கும். மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் வேலையிழப்பார்கள். மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் நேர்ந்த விளைவுகளின் தீவிரம் உணர்ந்து, விரைந்து தீர்வு கொடுக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளேன்" என்றார் ஜோதிமணி.