IFS அதிகாரியான கணவர் மீது IPS அதிகாரியான மனைவி வரதட்சணை புகார் அளித்துள்ள சம்பவம், இந்திய அளவில் வைரலாகி வருகிறது.
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த 34 வயது பெண் ஐபிஎஸ் அதிகாரியான இளம் பெண் ஒருவர், இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியாகப் பணி புரிந்து வரும் தனது கணவர் மீது வரதட்சணை மற்றும் துன்புறுத்தல் புகார் அளித்து உள்ளார்.
34 வயது பெண் ஐபிஎஸ் அதிகாரியான வர்த்திகா கட்டியார், KSRP ஆராய்ச்சி மையத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
அதே நேரத்தில், வெளியுறவு அமைச்சகத்தில் துணை செயலாளராக பணியாற்றி வரும் IFS அதிகாரியான தனது கணவர் நிதிஷ் சுபாஷ் யோலா, அவரது குடும்பத்தினரால் பல ஆண்டுக்காலம் பொருளாதாரம், உடல் மற்றும் மன ரீதியிலான துன்புறுத்தல் அனுபவித்து வருவதாகப் பெங்களூருவில் உள்ள காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்து உள்ளார்.
பெண் ஐபிஎஸ் அதிகாரியான வர்த்திகா கட்டியாரின் புகாரின் பேரில், அவருடைய கணவரும், IFS அதிகாரியுமான நிதிஷ் சுபாஷ் யோலா மீது வரதட்சணை, மோசடி, துன்புறுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
பெண் ஐபிஎஸ் அதிகாரியான வர்த்திகா கட்டியார் அளித்த புகாரில், “கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி எங்களின் திருமணம் நடைபெற்றது என்றும், திருமணம் நடைபெற்றதில் இருந்தே உடல், மன ரீதியாகவும், பொருளாதார ரீதியிலும் துன்புறுத்தலை நான் சந்தித்து வருகிறேன்” என்றும், அதில் குறிப்பிட்டு உள்ளார்.
மேலும், “மகாராஷ்டிரா மாநிலம் புவசலில் நடைபெற்ற திருமணத்திற்கான முழு செலவையும் எனது பெற்றோர் தான் செய்தனர் என்றும், எனினும் திருமணமான 3 மாதங்களுக்குள் 3 லட்ச ரூபாய் பணமும், தங்க நகைகளும் தர வேண்டும் என்றும், இல்லை என்றால் திருமணத்தை முறித்துக்கொள்வதாக எனது கணவரும், அவரின் குடும்பத்தினரும் என்னை தொடர்ந்து மிரட்டி வந்தனர்” என்றும், இதையே கூறி அடிக்கடி என்னை மிரட்டி எனது பெற்றோர்களிடமிருந்து பணத்தை அடுத்தடுத்து அவர்கள் பெற்றுக்கொண்டனர்” என்றும், அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார்.
“ஒரு கட்டத்தில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள எனது பாட்டியிடம் சென்று திருமணப் பந்தத்தை முறித்து விடுவதாக மிரட்டி 5 லட்சம் ரூபாய் பணத்தை எனது கணவர் பெற்றார் என்றும், இது தெரிந்த நான் அந்தப் பணத்தை நானே திருப்பி அளித்தேன் என்றும், வாங்கிய பணத்தைப் பாட்டியிடமே திருப்பிக்கொடுக்குமாறும் நான் என் கணவரை கேட்டுக்கொண்டேன் என்றும், ஆனால் அவர் எதையுமே கொடுக்கவில்லை” என்றும், கவலையுடன் கூறியுள்ளார்.
அத்துடன், “கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு சுற்றுலா சென்றபோது, எனது கையை முறித்து, எனது கணவர் கல்லால் என்னைத் தாக்கினார் என்றும், அதன் தொடர்ச்சியாக 2018 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு முறை கொழும்பு சென்ற போதும், அங்கு வைத்து என்னை அவர் பலவந்தமாக துன்புறுத்தினார்” என்றும், பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார்.
குறிப்பாக, “எனது கணவரின் அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம் மற்றும் புகைப் பழக்கம் காரணமாக எங்கள் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினைகள் எழுகிறது என்றும், எனது பிரசவத்தின் போதும் சரி, இந்த துன்புறுத்தலை நான் தொடர்ந்து அனுபவித்தேன் என்றும், பல ஆண்டுகளாக என் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினரால் நான் தொடர்ந்து துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகிறேன்” என்றும், அந்த புகார் மனுவில் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த புகார் இந்திய அளவில் பெரும் வைரலாகி வருகிறது. இதன் காரணமாக, சம்மந்தப்பட்ட IFS அதிகாரியான கணவர் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது.