தமிழகத்தில் எதிர்வரும் 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்னும் தலைப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார். மதுரை மற்றும் நெல்லை மண்டலங்களில் 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். இதன்படி முதல் கட்டப் பிரச்சாரத்தை மதுரையில் நேற்று தொடங்கினார். 


“எங்கள் பிரச்சார கூட்டங்களுக்கு காவல்துறையினரால் கடைசி நேரத்தில் தடை விதிக்கப்படுகிறது. எங்களுக்குத் தடைகள் புதிது இல்லை. தடைகள் குறித்து அனுபவம் இருக்கிறது. அதற்கான ஒத்திகையும் பார்த்து விட்டோம். சட்டத்துக்குட்பட்டு பிரச்சாரம் செய்வோம். எங்களது பிரச்சாரம் யாருக்கு உறுத்தலாக இருக்கிறதோ அவர்கள்தான் தடையை ஏற்படுத்துகிறார்கள். இதையும் மீறி எங்கள் பிரச்சாரம் தொடரும்.  பதற்றமின்றி மக்களைச் சென்று சென்றடைவோம். 


கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக் காக்க ? எதற்கு? என்ற கேள்வியை ட்விட்டரில் பதிவிட்டுள்ளேன். அதில் மோடியை டேக் செய்யவில்லை என கேட்கிறீர்கள். தற்போது செய்து விடலாம் என்றார். 


மேலும் ரஜினியுடன் கூட்டணி ஏற்படுமா என்ற கேள்விக்கு , ’’ அதைப்பற்றி இப்போது  கூற முடியாது.  கடைசி நேரத்தில் கட்சிகள், காட்சிகள் மாறும், புது அணி உருவாகும். இதற்குச் சற்று தாமதம் ஏற்படலாம்.” என்று தெரிவித்தார்.