ஜார்கண்ட் மாநிலத்தில் காணாமல் போன மருமகள் மீண்டும் கிடைக்க வேண்டி, மாமியார் ஒருவர் தனது நாக்கை வெட்டி சாமிக்கு காணிக்கையாகக் கொடுத்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் மாமியார் - மருமகள் சண்டை என்பது, இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலால். இதில், ஒவ்வொரு வீட்டு மாமியார் - மருமகள் சண்டையும் ஒவ்வொரு ரகம் இருக்கும். அந்த அளவுக்கு, மாமியார் - மருமகள் சண்டை என்பது இந்தியாவில் தவிர்க்க முடியாத அல்லது தீர்க்க முடியாக ஒரு பெரும் பிரச்சனையாகவே இருந்துகொண்டு இருக்கிறது.
அப்பேர்பட்ட இந்த சமூக சூழ்நிலையில், மாயமான தனது மருமகள் மீண்டும் கிடைக்க வேண்டும் என்ற அக்கறையில், மாமியார் ஒருவர் தனது தனது நாக்கை வெட்டி சாமிக்கு காணிக்கை கொடுத்த சம்பவம், மிகப் பெரும் பேசும் பொருளாக மாறி உள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் காணாமல் போன தனது மருமகள் கிடைக்க மாமியார் ஒருவர் தனது நாக்கை வெட்டி கடவுளுக்குக் காணிக்கையாகக் கொடுத்து உள்ளார். இது மூட நம்பிக்கை என்று கூறப்பட்டாலும் அன்பின் ஆழமான அடையாளமாகவும் இருக்கிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் செராகேலா கர்சவன் மாவட்டத்தில் உள்ள என்.ஐ.டி. பகுதியை லட்சுமி நிர்லா என்ற பெண்மணியின் மருமகள் ஜோதி என்ற பெண், கடந்த 14 ஆம் தேதி தனது குழந்தையுடன் மாயமாகி உள்ளார். இதனால், காணாமல் போன ஜோதியை அவரது கணவரும், அவரது மாமியாரும் அந்த ஊரின்
பல இடங்களிலும், பக்கத்து ஊரிலும் தேடி பார்த்துள்ளனர். எங்குத் தேடியும் ஜோதி இருக்கும் இடம் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அதன் தொடர்ச்சியாக, “மனைவியை காணவில்லை” என்று, ஜோதியின் கணவர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை தீவிரமாகத் தேடி வந்தனர். ஆனாலும், ஜோதி இருக்கும் இடம் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில், மருமகள் மீது மிகுந்த அன்பு வைத்து இருந்த அவரது மாமியார் லட்சுமி நிர்லா, தனது மருமகள் மீண்டும் கிடைக்க வேண்டும் என்று, கடவுளிடம் உருக்கமாக வேண்டிக்கொண்டதாகத் தெரிகிறது.
வேண்டுதலின் தொடர்ச்சியாக, நேற்று முன் தினம் மாமியார் லட்சுமி நிர்லா, அங்குள்ள சிவ பெருமான் கோயிலுக்குச் சென்று மீண்டும் உருக்க மாக வேண்டி உள்ளார்.
அப்போது, “தனது மருமகள் மீண்டும் கிடைக்க வேண்டும்” என்று, கூறிக்கொண்டே தனது நாக்கை அறுத்து அந்த கோயிலில் உள்ள சாமி முன்பு காணிக்கையாகக் கொடுத்து உள்ளார். இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனைப் பார்த்து, அந்த கோயிலில் கூடியிருந்த பலரும், அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், அவர் வர மறுத்துவிட்டார்.
இதனையடுத்து, லட்சுமி நிர்லாவின் மகன் மற்றும் கணவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் விரைந்து வந்து, லட்சுமி நிர்லாவை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், அவரால், இன்னும் பேச முடியவில்லை என்றும், கூறப்படுகிறது.
இது தொடர்பாக, லட்சுமியின் கணவர் நந்து லால் நிராலா கூறும்போது, “யாரோ ஒருவர் அவள் நாக்கை கடவுளுக்கு வழங்கினால், ஜோதி திரும்பி வருவாள் என்று, யாரோ ஒருவர் அவளிடம் கூறி இருக்கிறார்கள். இதனை நம்பி, என் மனைவியும் இப்படி செய்து விட்டார்” என்று, கவலைப்பட்டார்.
மேலும், “ஜோதி காணாமல் போன பிறகு, நிரலா பிரார்த்தனை செய்ய ஆரம்பித்து சிவபெருமானுக்கு முன்பாக பிளேடைப் பயன்படுத்தி நாக்கை வெட்டிக்கொண்டார்” என்றும், குறிப்பிட்டார்.
அத்துடன், “அவர் முதலில் மருத்துவமனைக்குச் செல்ல விரும்பவில்லை என்றும், எல்லோரும் கட்டாயப்படுத்திய பிறகே அவர் ஜாம்ஷெட்பூரின் எம்.ஜி.எம்.எம்.சி.எச். மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்” என்றும் தெரிவித்தார்.
“தொடர்ந்து லட்சுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இருப்பினும் தன் மனைவியால் இன்னும் பேச முடியவில்லை” என்றும், அவரது கணவர் கூறினார். இந்த சம்பவம், அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.