ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடு.. நினைவு இல்லமாக மாற்றும் பணிகள் தீவிரம்!
By Aruvi | Galatta | May 06, 2020, 12:31 pm
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை, நினைவு இல்லமாக்குவதற்கான பணிகளை, தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் இரும்பு பெண்மணியாகத் திகழ்ந்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அவரது மறைவு, அதிமுக கட்சிக்கு மட்டுமில்லாது ஒட்டுமொத்த தமிழகத்திற்கே பேரிழப்பாக அமைந்தது.
இதனையடுத்து, ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள வேதா இல்லம் என்று பெயரிடப்பட்ட அவருடைய பங்களாவை, நினைவு இல்லமாக்கும் பணிகளை அரசு மேற்கொண்டது.
ஆனால், இதனை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், அந்த வழக்கும் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் ஒரு பகுதியாக, அந்த நிலத்தைக் கையகப்படுத்தும் அறிவிப்பை, தமிழக அரசு தற்போது வெளியிட்டு உள்ளது.
மேலும், சென்னை போயஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த மக்களிடம் இதுபற்றி கருத்து கேட்பது தொடர்பான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. அந்த பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னரே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும், தமிழக அரசு தெரிவித்து உள்ளது.