நடிகர் விஜய் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய், பிகில் படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம், சினிமா பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட மொத்தம் 38 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள், கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிரடியாகச் சோதனை நடத்தினர்.

Vijay

இந்த சோதனையில், 77 கோடி ரூபாய் பணமும், பல்வேறு சொத்து தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது.

அத்துடன், நடிகர் விஜய் வீட்டில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.

பின்னர், கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, நடிகர் விஜய், தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ். கல்பாத்தி எஸ்.அகோரம், சினிமா பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோருக்கு, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியது.

அதன்படி, விசாரணைக்கான கடைசி நாளில்  விஜயின் ஆடிட்டர் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

IT raid at vijay home documents economic intelligence

சினிமா பைனான்சியர் அன்புசெழியனின் ஆடிட்டரும் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அப்போது, சோதனையின் கைப்பற்றப்பட்ட பணம், மற்றும் ஆவணங்கள் தொடர்பாகவும், பிகில் பட வசூல் விவகாரம் தொடர்பாகவும் அவர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆவணங்கள் அனைத்தும், தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இனி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்க உள்ளனர். விசாரணைக்குப் பிறகு, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.