“பிகில்” சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் அதிரடி சோதனை!
By Aruvi | Galatta | 01:53 PM
“பிகில்” படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனத்திற்குச் சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த “பிகில்” படம், வசூலில் புதிய சாதனைப் படைத்தது. குறிப்பாக, 500 கோடி ரூபாய் அளவுக்கு வசூலில் புதிய சாதனை படைத்ததாக செய்திகள் வெளியானது.
அத்துடன், “பிகில்” படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் நடிகர் விஜய், சமூக பிரச்சனைகள் குறித்து பேசியிருந்தார். இதனால், ஆளும் அதிமுக அரசின் கோபத்திற்கு ஆளானர்.
இதன் காரணமாக, “பிகில்” படத்தின் சிறப்பு காட்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், பின்னர் தடை நீக்கப்பட்டது.
இந்நிலையில், “பிகில்” படத்தைத் தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறையினர் தற்போது சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை தியாகராய நகரில் உள்ள வீடு மற்றும் தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட 20 இடங்களில் இந்த சோதனை தற்போது நடைபெற்று வருகிறது.
ஏ.ஜி.எஸ். நிறுவனமானது சினிமா தயாரிப்பு, சினிமா விநியோகம் மற்றும் திரையரங்குகள் எனப் பல தொழில்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.