`எங்ககிட்ட கொரோனாவுக்கு தடுப்பூசி ரெடி' - அறிவித்த ரஷ்யா! உண்மை நிலவரம் என்ன?

`எங்ககிட்ட கொரோனாவுக்கு தடுப்பூசி ரெடி' - அறிவித்த ரஷ்யா! உண்மை நிலவரம் என்ன? - Daily news

கொரோனாவுக்கான தடுப்பு மருந்தைத் தயாரிக்கும் இருக்கும் போட்டியில் இப்போதைக்கு முன்னணியில் இருப்பது பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம்தான். இருப்பினும், ரஷ்யா இந்த விஷயத்தில் இதை ஒப்புக்கொள்வதாக இல்லை. தாங்கள்தான் முன்னணியில் இருப்பதாகத் தொடர்ச்சியாகச் சொல்லி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, மூன்றாம் கட்ட தடுப்பு மருந்து சோதனையைச் செய்யும் முன்பே, கொரோனா தடுப்பு மருந்து மக்கள் பயன்பாட்டிற்கு வருவதாக ரஷ்யா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் ராணுவம் சார்பில், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த செச்செநோவ் பகுதியில் இருக்கும் மாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டிதான், இந்த பெயர் சொல்லப்படாத கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடித்து இருப்பதாக அறிவித்துள்ளது. வெறும் மூன்று மாத சோதனையில் மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது, அறிவியலாளர்களிடியே பல கேள்விகளை எழுப்பி வருகின்றது.

தனது சோதனையின் முடிவில், மனிதர்கள் மீது வெற்றிகரமாகச் சோதனை செய்து முடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்து இருக்கிறது. ரஷ்யாவைச் சேர்ந்த செச்செநோவ் பகுதியில் இருக்கும் மாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டி ரஷ்யாவின் கமாலேயா தேசிய மைக்ரோபயாலஜி ஆராய்ச்சி மையம் உடன் இணைந்து இந்த ஆராய்ச்சியைச் செய்து இருப்பதாக அறிவித்துள்ளது. அந்த நாட்டு ராணுவத்தின் நேரடி கண்காணிப்பு மற்றும் ஆலோசனையின் கீழ் இந்த சோதனை செய்யப்பட்டது.

இந்த ஆராய்ச்சிக்காக அந்த நாட்டு ராணுவம், தனது ராணுவ வீரர்களை அனுப்பி இருந்தது. அவர்கள் மீதுதான் ரஷ்யாவின் பெயர் வைக்கப்படாத அந்த கொரோனா தடுப்பு மருந்து பயன்படுத்தப்பட்டது. இந்த மனித சோதனையின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட வெற்றி அடைந்துவிட்டதாக ரஷ்யா அறிவித்து உள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளதாகவும், மருந்து பெரிய அளவில் பயன் அளித்து உள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்து இருக்கிறது.

இந்த நிலையில் மூன்றாம் கட்ட தடுப்பு மருந்து சோதனையைச் செய்யும் முன்பே, கொரோனா தடுப்பு மருந்து மக்கள் பயன்பாட்டிற்கு வருவதாக ரஷ்யா அறிவிப்பு வெளியிட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. 

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் ருசிலான் திசாலிகோவ் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். ``மக்களின் மீது இதை பயன்படுத்தப் போகிறோம்" என்று அவர் அறிவித்துள்ளார்.

இருப்பினும் அவர், இந்த மருந்தின் உற்பத்தி பெரிய அளவில் எப்போது தொடங்கும் என்று அறிவிக்கவில்லை. முதல்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சோதனை மொத்தம் 38 பேர் மீது சோதனை செய்யப்பட்டது. ஜூன் 18ம் தேதி 18 பேர் மீதும், ஜூன் 23ம் தேதி 20 பேர் மீதும் இந்த தடுப்பு மருந்தைச் சோதனை செய்து இருக்கிறார்கள் என்பது மட்டுமே இப்போதைக்குச் சொல்லப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 3ம் தேதியில் இருந்து இந்த சோதனைகள் செய்யப்பட உள்ளதாகவும், அதன்பின் இந்த மருந்து செப்டம்பர் மாதம் மக்களுக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளது என்றும் சொல்லப்பட்டு வருகிறது. 2020 இறுதிக்குள் 3 கோடி மருந்துகளைத் தனது நாட்டிற்குள் தயாரிக்க ரஷ்யா திட்டமிட்டு வருவதாகவும் தெரிகிறது. எந்தத் தகவலும் இன்னமும் அரசு தரப்பில் உறுதிசெய்யப்படவில்லை. உலக சுகாதார நிறுவனம் இன்னமும் எந்த மருந்தையும் அங்கீகரிக்காத நிலையில், ரஷ்யா இப்படி வேக வேகமாக செயல்படுவது கண்டனத்துக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் ரஷ்யா, சவுதி அரேபியா, அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இந்த மருந்தின் மூன்றாம் கட்ட சோதனை செய்யப்படும் என்று கூறுப்படுகிறது. 

இருப்பினும் ரஷ்யாவின் இந்த மருந்துக்கு, பலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். குறிப்பாக, `எப்படி முழுமையாகச் சோதனை செய்யாமல் மனிதர்களுக்கு இதை அளிக்கலாம். இது பாதுகாப்பானதுதானா என்பதை உறுதி செய்யாமல் எப்படி மக்களுக்குக் கொடுக்க முன்வரலாம். ஏன் அரசு இவ்வளவு அவசரப்படுகிறது. இது பெரிய ரிஸ்க்' என்று பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

இன்னொருபக்கம், ரஷ்யாவின் இந்த ஆய்வில் பிரிட்டன், அமெரிக்கா, கனடாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை ரஷ்ய உளவாளிகள் இலக்கு வைப்பதாகப் பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இங்கிலாந்தின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் (என்.சி.எஸ்.சி), ஹேக்கர்கள் ரஷ்ய உளவுத்துறையின் ஒரு பகுதியாகச் செயல்படுவதாகச் சொல்லப்படுகிறது. எனினும், இதில் எந்தெந்த நிறுவனங்கள் குறிவைக்கப்பட்டன அல்லது ஏதேனும் தகவல் திருடப்பட்டதா என்று அது குறிப்பிடவில்லை.

உலகிலேயே கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில், 4 - வது இடத்தில் இருக்கும் ரஷ்யா, தன்னை முன்னிலை காட்டிக்கொள்வதில் காட்டும் ஆர்வத்தை, மக்களைக் காப்பதில் இருக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள் அறிவியலாளர்கள். மூன்றாம் நிலை ஆய்வில் வெற்றிப்பெற, வளர்ந்த நாடுகளே பல மாதங்கள் எடுத்துக் கொள்ளும்போது, ரஷ்யா இப்படிப் பொறுப்பின்றி செயல்படுவது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனப் பல தரப்பிலிருந்தும் ரஷ்யாவுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்படுகிறது.

 

- ஜெ.நிவேதா.

Leave a Comment