அடேங்கப்பா.. சிறுவனின் கழுத்தைக் குத்தி கிழித்து மறுபக்கம் வந்த மீன்!
By Aruvi | Galatta | 12:27 PM
இந்தோனேசியாவில் மீன் ஒன்று, சிறுவனின் கழுத்தைக் குத்தி கிழித்து மறுபக்கம் வந்ததால், சிறுவன் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.
இந்தோனேசியா நாட்டின் ஜகார்தாவை சேர்ந்த 16 வயது சிறுவன் முகமது இதில், தனது தந்தையாருடன் அருகில் உள்ள கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.
அப்போது, மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் தண்ணீரிலிருந்து வெளியே பாயக்கூடிய மீன் ஒன்று, சிறுவன் மீது பாய்ந்துள்ளது.
குறிப்பாக, அந்த மீனின் வாய் பகுதியானது, ஊசிபோல் கூர்மையாக இருந்ததால், சிறுவனின் கழுத்தில் குத்தி கிழித்து, மறுபக்கமாக வெளியே வந்துள்ளது.
இதனால், சிறுவன் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் சரிந்து விழுந்தார். இதனைப் பார்த்துப் பயந்துபோன சிறுவனின் தந்தை, அவசர அவசரமாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு, சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் 3 பேர் சேர்ந்து, சுமார் 2 மணி நேரம் போராடி மிகக் கவனமாகக் கையாண்டு, கழுத்தில் மாட்டிய மீனை வெளியே எடுத்து அகற்றினர்.
குறிப்பாக, கழுத்து பகுதியில் ரத்தக்குழாய் ஒன்று செல்வதால், அதைச் சேதப்படுத்தாமல் மீனை மருத்துவர்கள் அகற்றி உள்ளனர்.
சிறுவனின் கழுத்திலிருந்து மீனை அகற்றினாலும், சிறுவன் தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், சிறுவன், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளார்.