வாவ்.. உசைன் போல்ட்டை முந்தி கர்நாடக கம்பாளா பந்தய வீரர்கள் புதிய சாதனை!
By Aruvi | Galatta | 12:36 PM
உசைன் போல்ட்டை முந்தி, கர்நாடக கம்பாளா பந்தய வீரர்கள் மேலும் 3 பேர் புதிய சாதனை படைத்துள்ளது வைரலாகி வருகிறது.
ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த “மின்னல் வீரன்” என்று அழைக்கப்படும் உசைன் போல்ட், கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டத்தில் 9.69 வினாடிகளில் கடந்து, புதிய உலக சாதனை படைத்தார். மேலும், 200 மீட்டர் ஓட்டத்தில், 19.30 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தார். இதனால் தான், உலகம் இவருக்கு “மின்னல் வீரன்” என்ற அடைமொழி தந்தது.
இதனிடையே, கர்நாடகா மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற கம்பாளா போட்டியில் மொத்தம் 4 வீரர்கள் உசைன் போல்ட் சாதனையை முந்தி, புதிய சாதனை படைத்துள்ளதாக கம்பாளா நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, கம்பாளா என்கிற பாரம்பரிய விளையாட்டு என்பது, “தண்ணீர் நிரப்பப்பட்ட விளை நிலத்தில் 2 எரிமைகளை இழுத்துப் படித்தவாறு சுமார் 142 மீட்டர் தொலைவுக்கு ஓடுவதே” ஆகும்.
இப்படி, கர்நாடகா மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற கம்பாளா போட்டியில், சீனிவாசா கவுடா என்ற இளைஞர், கம்பாளா பந்தய தூரத்தை 13.62 வினாடிகளில் கடந்ததாக கூறப்பட்டது. இதனை, 100 மீட்டர் தூரு ஒட்டமாக மதிப்பிட்டால், சுமார் 9.55 வினாடிகள் கடந்ததற்கு சமம் என்று கூறப்பட்டது.
இதனிடையே, பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டத்தில் 9.69 வினாடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்த உசைன் போல்ட் சாதனையை முந்திவிட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் கடந்த 16 ஆம் தேதி நடைபெற்ற கம்பாளா போட்டியில், சுரேஷ் ஷெட்டி என்ற இளைஞர் 100 மீட்டர் தூரத்தை 9.51 வினாடிகளில் கடந்து சாதனை படைத்ததாகக் கூறப்படுகிறது.
அதேபோல், ஆனந்த் மற்றும் அக்கேரி சுரேஷ் ஆகியோர் தலா 9.57 வினாடிகளில் 100 மீட்டர் தூரத்தைக் கடந்த சாதனை படைத்ததாகவும் கம்பாளா நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளை சர்வதேச போட்டிகளுடன் ஒப்பிடக் கூடாது என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், இப்படிப்பட்ட திறமையானவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தகுந்த பயிற்சி அளித்தாலே, ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தங்கம் வெல்வதில் பல புதிய சாதனைகளை படைக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்பது மட்டும் உண்மை.