வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய புகாரில் அமெரிக்க மாப்பிள்ளையை காவல் துறையினர், சென்னை விமான நிலையத்திலேயே வைத்து கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் முத்தையாள் நகரைச் சேர்ந்தவர் வசந்தன். இவருக்கும், இணையதளத்தில் மேட்ரிமோனி மூலம் சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த
ஜெயஸ்ரீக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு பெற்றோர்கள்  சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. 

திருமணத்திற்கு பிறகு, மிகவும் மகிழ்ச்சியாக சென்றுக்கொண்டிருந்த நிலையில், அடுத்த சில மாதங்களிலேயே மனைவியை ஜெயஸ்ரீயை, கணவன் மிகவும் கொடுமை படுத்திதாக கூறப்படுகிறது. 

மேலும், வரதட்சணை கேட்டு தனது கணவர் வசந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் கொடுமைப்படுத்த தொடங்கி உள்ளனர். 

இந்த சமயத்தில், தனது கணவர் வசந்திற்கு அமெரிக்காவில் வேலை கிடைத்துள்ளது. இதனையடுத்து, வெளிநாட்டில் வேலைக்கு சேர்ந்த வசந்தன் தனது மனைவி ஜெயஸ்ரீயையும் அழைத்துக்கொண்டு அமெரிக்காவிற்கு சென்றுவிட்டார். 

அமெரிக்கா வந்த பிறகும் வசந்தன் தனது மனைவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்து உள்ளார். 

இதனை சகித்துக்கொள்ள முடியாத ஜெயஸ்ரீ, ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி கடந்த 2019 ஆம் ஆண்டு அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அவர் முறைப்படி விவகாரத்து பெற்றார். 

அதன் பின்பு, கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை வந்த ஜெயஸ்ரீ, தனக்கு நடந்த வரதட்சணை கொடுமை படுத்திய தனது கணவர் வசந்தன் மற்றும் அவரது குடும்பத்தைப் பற்றி உடனடியாக அண்ணா சாலையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார் அளித்தார். 

இந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர், உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணைக்கு ஆஜராகுமாறு வசந்தனை காவல் துறையினர் கேட்டுக்கொண்டனர். 

ஆனால், நீண்ட நாட்களாகவே வசந்தனும் அவரது குடும்பத்தாரும் ஆஜராகமால் காவல் துறைக்கு டிமிக்கு கொடுத்து வந்துள்ளனர்.

இதன் காரணமாக உடனடியாக வசந்தன் மற்றும் அவரது குடும்பத்தினரின் பாஸ்போர்ட்டை முடக்க விமான நிலையத்தில் தகவல் கொடுக்கப்பட்டும் பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி சென்னை வந்த வசந்தனை விமான நிலையத்தில் வைத்து காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். 
      
கைது செய்யப்பட்ட வசந்தன் மீது "பெண்ணை கொடுமைப்படுத்துதல், நம்பிக்கை மோசடி" உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.