“என்னை யாரும் கடத்தவில்லை என்றும்,  விருப்பப்பட்டே திருமணம் செய்தேன்” என்றும் நீதிபதியிடம் இளமதி வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள தர்மபுரி கிராமத்தைச் சேர்ந்த செல்வன், அந்த பகுதியில் உள்ள குருப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த இளமதி ஆகிய இருவரும் ஒன்றாக பணியாற்றும்போது, கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். 

Ilamathi says she married by own choice

இவர்களது காதலுக்கு இரு வீட்டாரின் பெற்றோர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், இருவருக்கும் திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் முன்னின்று திருமணம் செய்து வைத்தார்.

புது மணத் தம்பதிகள் அன்று இரவு, சேலம் மாவட்டம் கொளத்தூர் அடுத்துள்ள காவலாண்டியூரில் உள்ள ஈஸ்வரன் வீட்டில் தங்கியிருந்தபோது, 50 பேர் கொண்ட கும்பல், வீடு புகுந்து ஈஸ்வரன் மற்றும் செல்வனை கடுமையாகத் தாக்கிவிட்டு, இளமதியை கடத்திச் சென்றனர்.

Ilamathi says she married by own choice

இது தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இளமதியின் தந்தை மற்றும் அவரது மாமா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, கடத்தப்பட்ட இளமதி தனது வழக்கறிஞர் சரவணன் உடன் மேட்டூர் காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஜரான நிலையில், “இளமதி, தன்னுடைய பெற்றோருடன் செல்ல விரும்புவதாக” அவரது வழக்கறிஞர் சரவணன் கூறினார்.

Ilamathi says she married by own choice

இதனைத் தொடர்ந்து, “சாதி மறுப்பு திருமணம் செய்த இளமதியை கடத்தியதாக தி.வி.க. தலைவர் கொளத்தூர் மணி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல், இளமதியை திருமணம் செய்த செல்வன் உள்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனிடையே, 4 பேர் மீது பதிய பட்ட வழக்கு தொடர்பாக, நீதிபதி ஜீவ பாண்டியன் வீட்டில் இளமதி ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, “தன்னை யாரும் கடத்தவில்லை, செல்வனை காதலித்து தாமாக விருப்பப்பட்டுத் தான் திருமணம் செய்துகொண்டேன்” என்று இளமதி வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, இளமதி அங்கிருந்து புறப்பட்டார்.

மேலும், “தனது மனைவியைக் கடத்தியதாக” செல்வன் அளித்த புகாரின் பேரில், இளமதி இன்று ஆஜராகி விளக்கம் அளிக்கப்பட்ட பிறகு, சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்குக் காவல் துறையினர் இளமதியை அழைத்துச் சென்று ஆஜர் படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.