கோடையில் குளிர்ந்த தமிழகம்! மக்கள் மகிழ்ச்சி
By Aruvi | Galatta | May 12, 2020, 02:05 pm
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ள நிலையிலும், பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில், வாட்டி வதைத்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே சென்னை, மதுரை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது.
அதனைத்தொடர்ந்து, அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகும், வெயிலின் தாக்கம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கடுமையாக உணரப்பட்டது. இதனால், தமிழகத்தில் சுமார் 10 மாவட்டங்களில் தொடர்ந்து வெயில் சதம் அடித்து வருகிறது. 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிப்பதால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே, அச்சப்பட்டு வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர்.
இந்நிலையில், கோடை வெயிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து, பூமி குளிர்ந்து காணப்படுகிறது.
அதன்படி, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி, புனல்வாசல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து 2 வது நாளாக இன்றும் மழை பெய்தது. இதனால், வெயில் சற்று தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
அதேபோல், விழுப்புரம் மாவட்டம் மரக்கணாம், திண்டிவனம், கோட்டக்குப்பம் அனுமந்தை பிரம்மதேசம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
அதனைத்தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, திருக்கோயிலூர் உள்ளிட்ட பகுதியிலும் பரவலாக மழை பெய்து வருவதால், அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும், மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், திருமானூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
அத்துடன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பரவலான மழை காரணமாக, விவசாயப் பணியையும் சில விவசாயிகள் மேற்கொள்ளத் திட்டுள்ளனர்.