வெட்டுக்கிளிகள் தமிழகம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு
By Aruvi | Galatta | May 27, 2020, 12:05 pm
வெட்டுக்கிளிகள் படை தமிழகம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று தமிழக வேளாண்துறை தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளைக் கடுமையான உணவுப் பஞ்சத்தில் தள்ளியுள்ள வெட்டுக்கிளிகளின் கூட்டம், இந்தியாவையும் தற்போது சூறையாடத் தொடங்கியுள்ளது. இதனால், இந்தியாவிலும் உணவுப்பஞ்சம் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில், மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் பாலைவன வெட்டுக்கிளிகளின் கூட்டம், விவசாய நிலங்களை முழுவதுமாக சேதப்படுத்தி உள்ளன.
விளைநிலங்களைச் சேதப்படுத்தும் பெரிய யானைகளையும், காட்டு விலங்குகளையும் எளிதாக விரட்டும் ஏழை விவசாயிகள், உருவத்தில் சிறியதாகக் காணப்படும் வெட்டுக்கிளிகளை விரட்ட முடியாமல் திகைத்துப்போய் நிற்கின்றனர்.
“எப்போதும் வெட்டுக்கிளிகள் கூட்டத்தின் பாதிப்பானது ஜூன், ஜூலை மாதங்களில்தான் இருக்கும் என்றும், ஆனால், இந்த ஆண்டு மே மாதமே வந்துவிட்டது” பல்வேறு கேள்விகளை எழுப்பியதாக” சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், “பருவ நிலை மாற்றத்தால் நிறத்திலும், உருவத்திலும் மாற்றமடையும் வெட்டுக்கிளிகள், கோடிக்கணக்கில் இணைந்து கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து விளை நிலங்களில் மிகப் பெரிய அளவிற்குச் சேதத்தை ஏற்படுத்தி வருவதாகவும், இதனை Locust swarms அட்டாக்” என்றும், உலக சுற்றுச்சூழல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக, கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெட்டுக்கிளிகள் கூட்டமாக இந்த ஆண்டு மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதனால், ஒட்டுமொத்த விவசாயிகளும் கலக்கமடைந்துள்ளனர்.
இதனிடையே, “வெட்டுக்கிளிகள் படை தமிழகம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு” என்று, தமிழக வேளாண்துறை தெரிவித்துள்ளது.
மேலும், வெட்டுக்கிளிகள் தாக்குதல் ஏற்பட்டால், கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து தமிழக வேளாண்துறை அறிவுறுத்தல்களையும் தற்போது வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.