வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்குத் தமிழக அரசு அறிவுரை!
By Aruvi | Galatta | 10:30 AM
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், குடும்பத்தினர் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் சற்று வேகமாகப் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக, 144 தடை உத்தரவு மிக கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆனாலும், பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசும், போலீசாரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் இதுவரை 911 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீட்டு கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளைத் தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி,
- வீட்டில் உள்ள அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும்.
- வீட்டில் குறிப்பிட்ட நபர் மட்டுமே தனிமைப் படுத்தப்பட்டவருக்குப் பராமரிப்பு பணி செய்ய வேண்டும்.
- தனிமைப்படுத்தப்பட்ட நபருக்குத் தனி கழிப்பறையுடன் கூடிய காற்றோட்டமான தனி ஒரு அறையை ஒதுக்க வேண்டும்.
- தனிமைப்படுத்தப்பட்ட நபர், எக்காரணம் கொண்டும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.
- குறிப்பாக, வீட்டிற்குள் அங்கும் இங்கும் செல்லாமல், ஒரே இடத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான், மற்றவர்களுக்கு அது பரவாமல் இருக்கும்.
- தனிமைப்படுத்தப்பட்ட நபர் பயன்படுத்தும் உரை, படுக்கை விரிப்பு ஆகியவற்றை உதறாமல், தனியாகச் சோப்பு நீரில் ஊறவைத்துத் துவைக்க வேண்டும்.
- தனிமைப் படுத்தப்பட்டவர் பயன்படுத்தும் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது.
- வீட்டில் தினமும் 3 முறையாவது கிருமி நாசினி கொண்டு, தூய்மைப்படுத்த வேண்டும்.
- தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு, ஆரோக்கியமான மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி மிக்க உணவுகளையே கொடுக்க வேண்டும்.