இந்திய அரசு, புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்கான 2020-ம் ஆண்டிற்கான வரைவைக் கடந்த மார்ச் மாதம் 12-ம் தேதியன்று வெளியிட்டது. பொதுமக்கள் அந்தப் புதிய வரைவின் மீதுள்ள விமர்சனங்களையும் கருத்துகளையும் தெரியப்படுத்த ஜூன் 30-ம் தேதி வரை அவகாசம் கொடுத்திருந்தது.
1994-ம் ஆண்டு முதல் இந்த மதிப்பீடுகள், நடைமுறையில் இருக்கின்றன. ஒரு நிலத்தின் இயல்புத் தன்மையும் அதன் சூழலியல் சமநிலையும் அவற்றைச் சார்ந்திருக்கும் எளிய மக்களின் வாழ்வாதாரமும், தொழில் வளர்ச்சித் திட்டங்களால் பாதிக்கப்பட்டுவிடக் கூடாதென்ற நோக்கத்தோடு இந்த மதிப்பீட்டு முறை கொண்டுவரப்பட்டது. ஒவ்வொரு முறையும், குறிப்பிட்ட திட்டத்திற்கு மக்களுடைய கருத்து என்ன என்பதில் தொடங்கி, அதனால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் சீர்கேடுகள் வரை அனைத்தையுமே பதிவு செய்யப்படுவதும் வழக்கம். இதற்குரிய சட்டவிதிகளில் இதற்கு முன்னர் 2006-ம் ஆண்டு சில திருத்தங்கள் செய்யப்பட்டன. அதில் மீண்டும் தற்போது திருத்தங்கள் செய்யப்படவுள்ளன. அதற்கான திருத்தப்பட்ட புதிய தாக்க மதிப்பீட்டின் வரைவுதான் இந்த `புதிய சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு-2020.'
ஆனால், கொரோனா தொற்று நோய் உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில், மக்கள் அதிலிருந்து மீண்டு வருவதற்கான போராட்டத்தில் இருக்கின்ற சூழலில், அந்தக் கால அவகாசம், அனைத்துத் தரப்பு மக்களிடமும் அதைக் கொண்டுசேர்க்கப் போதுமானதாக இல்லையென்று கூறி, அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென்று சூழலியல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். அதேநேரம், புதிய சூழலியல் தாக்க மதிப்பீடு 2020-ம் ஆண்டு வரைவு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிரான பல்வேறு அம்சங்களைக் கொண்டிருப்பதாக நாடு முழுவதும் விமர்சனங்கள் எழுந்தன. தொழிற்சாலைகளின் மாசுபாடுகளிடமிருந்து இயற்கையைப் பாதுகாக்கவென்றே இதுவரை இருந்த பல விதிமுறைகள், மழுங்கடிப்பட்டுள்ளன என்று சூழலியலாளர்கள் இந்தப் புதிய வரைவை எதிர்க்கின்றனர்.
இந்நிலையில், புதிய வரைவு குறித்து இணைய வழியில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருந்த, அதில் செய்யப்பட்ட திருத்தங்கள் குறித்து, அது ஏற்படுத்தவுள்ள சூழலியல் சீரழிவுகள் குறித்து விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருந்த மூன்று இணையதளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. இது சூழலியலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவை fridaysforfuture.in, letindiabreathe.in, thereisnoearthb.com போன்றவைதான்.
இந்த மூன்று இயக்கங்களுமே, மத்திய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் வெளியிட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு 2020-ஐ கடுமையாக எதிர்த்துக்கொண்டிருந்த சூழலியல் இயக்கங்களின் பட்டியலில் முன்னணியிலிருந்தன.
இந்தியத் தேசிய இணையவழி மாற்றத்திற்கான National Internet Exchange of India (NIXI) என்ற அமைப்புதான் இந்த இணையதளங்களை முடக்கியுள்ளது. நடுநிலை அமைப்பாகத் தன்னை அறிவித்துக்கொண்டு இயங்குகின்ற இந்த NIXI அமைப்பு, இந்திய அரசாங்கத்தின் தகவல் தொழில் நுட்பத்துறையின் செயலாளருக்குக் கீழே செயல்படுகின்றது. பல்வேறு இணைய சர்வர்களில் There is No Earth B அமைப்பின் இணையதளம் முடக்கப்பட்டது தெரிய வந்ததும், அவர்கள் தொலைத்தொடர்புத் துறையிடம் விவரம் கேட்டனர். ஆனால், அதற்குரிய எந்த விவரத்தையும் அவர்கள் அளிக்கவில்லை.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை, மக்களைக் கேள்வி கேட்கவும், விமர்சிக்கவும் விடாத அணுகுமுறை, நம் எதிர்காலச் சமூகத்தின் ஜனநாயக ஆரோக்கியத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகின்றது. மத்திய அரசு உடனடியாக, இந்த இணையதள முடக்கத்திலிருந்து பின்வாங்க வேண்டும். கருத்துரிமைக்கு மதிப்பளித்துச் செயல்பட வேண்டுமென்று சூழலியல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஏற்கெனவே செய்தி ஊடகங்கள் பலதரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துவரும் நேரத்தில், இப்போது சூழலியல் செயற்பாட்டாளர்களின் உரிமையிலும் கைவைத்திருப்பது, கண்டனங்களுக்கு உட்பட்ட விஷயம் என்கிறார்கள் எதிர்க்கட்சிகள். வலதுசாரிகளின் ஆதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடுதான் இவையெனச் சொல்லி, இடதுசாரிகள் தரப்பிலும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
- பெ.மதலை ஆரோன்