கொரோனா பலி.. உடல் அடக்கத்தை எதிர்த்தால் குண்டர் சட்டம் பாயும்..!
By Aruvi | Galatta | Apr 21, 2020, 01:11 pm
கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் குண்டர் சட்டம் பாயும் என்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த 56 வயதான மருத்துவர் ஒருவர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து, மருத்துவரின் உடலை அடக்கம் செய்வதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவில் டி.பி.சத்திரம் பகுதியில் உள்ள கல்லறைக்கு, ஆம்புலன் மூலம் கொண்டு வரப்பட்டது.
அப்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், சரமாரியாகக் கல்வீசி ஆம்புலன்ஸ் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். அதில், மாநகராட்சி அதிகாரி ஒருவரின் மண்டை உடைந்து 10 தையல்கள் போடப்பட்டது. இதனால், அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது.
இது தொடர்பாக அங்கு விரைந்து வந்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட பெண் உட்பட 21 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பின்னர், வேலங்காடு மயானத்திற்கு மருத்துவரின் உடலை கொண்டு சென்றபோது, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் கலவரத்திலும் ஈடுபட்டனர். மேலும், அந்த மருத்துவரின் உடலை இங்கே புதைத்தால், இந்த பகுதி மக்களுக்கும் வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது என்று கூறி, சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து, கீழ்ப்பாக்கம் கல்லறையில் புதைக்க மருத்துவரின் உலை கொண்டு சென்றபோது, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த செனாய் நகரைச் சேர்ந்த 90 க்கும் மேற்பட்டவர்கள் மீது டி.பி. சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனாவால் இறந்தவர்களின் உடல் அடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்போர் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும், குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, மருத்துவர்களின் அர்ப்பணிப்பிற்கு மரியாதையளித்து, மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி, தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.