விவாகரத்தான பெண்களை குறிவைத்து திருமணம் செய்துகொள்வதாகப் பணம் மோசடியில் ஈடுபட்ட போலி தொழிலதிபரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து உள்ளனர். 

சென்னை சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர், விவகாரத்து ஆன நிலையில், தனது 13 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார்.

அதே நேரத்தில், 2 வது திருமணம் தொடர்பாக அவர் பிரபல திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். 

அப்போது, ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த 45 வயதான மனோகரன் என்பவர், தன்னை தொழில் அதிபர் என்றும், தானும் விவாகரத்து ஆனவர் என்றும், அந்த பெண்ணிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்டு பழகி உள்ளார்.  

மேலும், “நான் உங்களைத் திருமணம் செய்ய விரும்புகிறேன்” என்று, மனோகரன் கூறியிருக்கிறார். இதனால், 40 வயதான அந்த பெண்ணும் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்து உள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, அவர்கள் இருவரும் பழகி வந்தனர். இந்த பழக்கத்தில், செல்போன் உள்பட விலை உயர்ந்த பல பொருட்களையும், திருமணம் செய்துகொள்ளப் போகும் மனோகரனுக்கு அந்த பெண் பரிசாக அளித்து உள்ளார். 

இந்த நிலையில் தான், “எனக்கு மருத்துவச் செலவுக்கு 10 லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது” என்று, மனோகரன் கேட்டிருக்கிறார். இதனை நம்பி, அந்த பெண்ணும், அவர் கூறிய வங்கி கணக்கில் 10 லட்சம் ரூபாய் பணத்தைச் செலுத்தி இருக்கிறார். ஆனால், அதன் பிறகு மனோகரனை அந்த பெண்ணால் தொடர்புகொள்ள முடியவில்லை. தொடர்ந்து, அவரது செல்போன் எண் சுவிட் ஆப் என்று வந்துள்ளது. அதன் பிறகு, அந்த நபரிடம் இருந்து எந்த தொடர்பும் 
வரைவில்லை.

இதனையடுத்து, தான் ஏமாற்றம் அடைந்ததை அந்த பெண் உணர்ந்திருக்கிறாள். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், “என்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி 10 லட்சம் ரூபாய் பணம் மோசடியில் ஈடுபட்ட மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி, சென்னை அடையார் துணை கமிஷனர் விக்ரமனை சந்தித்து புகார் மனு அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன் படி, அந்த நபரின் வங்கி எண்ணை வைத்து, அந்த நபரை தேட முயன்றனர்.

அதன் தொடர்ச்சியாக, மனோகரனின் செல்போன் எண்ணை போலீசார் ஆராய்ந்து பார்த்தனர். அப்போது, அவர் ஐதராபாத்தில் இருப்பது தெரிய வந்தது. 

இதையடுத்து, சென்னை சைதாப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் காணிக்கை ராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார், உடனடியாக ஐதராபாத் விரைந்து சென்று, மனோகரனை அதிரடியாகக் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். 

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “மனோகரனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ஆந்திரா மாநிலம் சித்தூரில் வசித்து வருவது” தெரிய வந்தது.

மேலும், “இதே போன்று, தன்னை தொழில் அதிபர் என்று கூறி பல பெண்களைத் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டது வந்ததும்” விசாரணையில் தெரிய வந்தது. 

அதன் தொடர்ச்சியாக, மனோகரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.