தமிழகத்தில் கரும்பூஞ்ஜை தொற்றுக்கு முதல் உயிரிழப்பு நிகழ்ந்துள்ள பொதுமக்களை இன்னும் பீதியடையச் செய்துள்ளது. கருப்பு பூஞ்சை தொற்றின் அறிகுறிகள் என்ன? எப்படி இருக்கும்? என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்ட பலருக்கும் கரும்பூஞ்சை தொற்று என்னும் புதிய நோய், பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவ உலகம் கூறியுள்ளது. இதனால், கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று, மருத்துவர்கள் பலரும் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பல உலக நாடுகளில் காணப்பட்ட கொரோனா கரும்பூஞ்சை தொற்று, இந்தியாவில் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தகாண்ட், பீகார் கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் காணப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, இந்த கரும்பூஞ்சை தொற்று தமிழகத்திலும் தொற்றிக்கொண்டது.

அதாவது, கோவில்பட்டியைச் சேர்ந்த 57 வயது வெல்டிங் பட்டறை உரிமையாளர் ஒருவர் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நிலையில், கரும்பூஞ்ஜை தொற்றுக்கு ஆளானார். இதனையடுத்து, அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், தமிழகத்தில் கரும்பூஞ்ஜை தொற்றுக்கு முதல் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது.

இப்படியான சூழ்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் கரும்பூஞ்ஜை தொற்றுக்கு இது வரை 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக” குறிப்பிட்டார்.

அத்துடன், “கரும்பூஞ்ஜை தொற்றை கண்டு மக்கள் அச்சப்படத் தேவை இல்லை என்றும், இது புதிதாக உருவான தொற்று பாதிப்பு அல்ல“ என்றும், கூறினார்.

“கரும்பூஞ்ஜை பாதிப்பு கண்டு ஆராயக் குழு அமைக்கப்பட்டு உள்ளது” என்றும், தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அதே போல், இது குறித்து பேசிய சுகாதாரத்துறை அதிகாரிகள், “இந்த கருப்பு பூஞ்சை தொற்று காரணமாக மியூகோர்மைகோசிஸ் என்ற நோய் ஏற்படுகிறது என்றும், சுற்றுச்சுழலில் உள்ள பூஞ்சை மூலம், இந்த கருப்பு பூஞ்சை மனிதர்களுக்கு எளிதாகப் பரவுகிறது” என்றும், குறிப்பிட்டனர்.

குறிப்பாக, “மனிதர்களுக்கு உள்ள வெட்டுக்காயம், தீக்காயம் வழியாகத் தோலில் நுழையும் இந்த பூஞ்சை, அதன் பிறகு தோலின் மீதும் பரவுகிறது” என்றும், விளக்கம் அளித்தனர்.

முக்கியமாக, “சர்க்கரை நோய் உள்ளவர்கள், அதிகளவில் ஸ்டீராய்டு எடுத்துக் கொள்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ள கொரோனா நோயாளிகளை இந்த கருப்பு பூஞ்சை எளிதில் தாக்குவதாகவும்” குறிப்பிட்டனர். 

“கடுமையான தலைவலி, கண்களில் வீக்கம், கண்கள் சிவப்பாக மாறுதல், திடீரென பார்வை குறைபாடு ஏற்படுதல், சைனஸ் பிரச்சனை, மூக்கில் வலி, வாய் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கருப்பாக மாறுவது உள்ளிட்டவை இந்த நோய் தொற்றுக்கு முக்கிய அறிகுறிகளாக இருப்பதாகவும்” அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். 

மிக முக்கியமாக, “இந்த கருப்பு பூஞ்சை நோய் தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறியத் தவறினால், கண் பார்வை குறைபாடு, வாய், மூக்கு, தொண்டை பகுதிகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும், மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல், எந்த மருந்தையும் தன்னிச்சையாக எடுத்துக்கொள்ளக் கூடாது” என்றும், சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

அதே போல், மதுரையில் 50 பேருக்கு கரும்பூஞ்சை பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே, கேரளாவில் கருப்புப் பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளியின் கண்ணை மருத்துவர்கள் தற்போது அகற்றி உள்ளதாகவும், அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.