தமிழகத்தின் சில மாவட்டங்களில் இனி 3 நாட்களுக்கு மட்டுமே கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை ஊரடங்கிற்கு முன் 18 ஆக இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

Essentil services to function only for 3 days a week

இதுவரை தமிழகம் முழுவதும் 837 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 21 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனிடையே, ஊரடங்கைப் பலர் மதிப்பதில்லை என்றும், இதனால் 144 தடை உத்தரவைக் கடுமையாகப் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்றும், இதை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார். 

மேலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது 2 வது நிலையில் இருப்பதாகவும், அது 3 வது நிலைக்குச் செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் முதலமைச்சர் பழனிசாமி நேற்று எச்சரிக்கை விடுத்தார். 

இதனால், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் திறந்திருக்கும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Essentil services to function only for 3 days a week

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக, சில கட்டுப்பாடுகள் அதிரடியாக விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே கடைகள் இயங்கும் என்று அம்மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் அறிவித்துள்ளார்.

வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன் ஆகிய 3 நாட்கள் மட்டுமே மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். இதனால், குறிப்பிட்ட இந்த 3 நாட்களில் மட்டும் மக்கள் கடைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஊரடங்கு முடியும் வரை இறைச்சிக்கடைகளைத் திறக்கவும் மாவட்ட நிர்வாகம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக விளக்கம் அளித்த முதலமைச்சர், அந்தந்த பகுதிகளின் மக்கள் தொகையை பொறுத்தே கடைகள் திறந்திருக்கும் நேரத்தை மாவட்ட ஆட்சியர்கள் முடிவு செய்வதாகவும், இந்த முடிவுகள் எல்லாம் அந்த பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் சங்கங்களின் முழு ஒத்துழைப்போடு தான் எடுக்கப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளித்தார்.

சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களில், வீடுகளுக்கே காய்கறிகளைக் கொண்டு சென்று டோர் டெலிவரி செய்யும் திட்டமும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. 

அதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே பொதுமக்கள் கடைகளில் பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

குறிப்பாக, இந்த 2 நாட்களும் 15 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே வெளியே வர வேண்டும் என்றும், அவர்களுக்கு சில வண்ணங்களில் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், சேலம் மாவட்டத்திலும் ஊரடங்கு நடைமுறை கடுமையாக்கப்பட்டுள்ளது. வாரத்தில் 4 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே, மளிகை காய்கறிகள் வாங்க மக்கள் கடைகளுக்கு அனுமதிக்கப்படுவர் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

தஞ்சாவூர் மாவட்டத்தில் சில பகுதிகளிலும், பால் பண்ணைகள் மற்றும் பால் கடைகளைக் காலையில் மட்டுமே திறக்க வேண்டும் என்றும், மாலையில் திறக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

முழு ஊரடங்கால் நீலகிரி மாவட்டத்தில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான வேளாண் உற்பத்தி பொருட்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால், விவசாய பொருட்களைக் கெட்டு அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால், பொதுமக்கள் பல இன்னல்களுக்கு ஆளானாலும், போலீசாரின் புதிய விதிமுறைகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் நாள் முழுக்க செயல்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் கொரோனா வீரியம் அடைந்து வருவதால், மளிகைக் கடைகள் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு, தற்போது அது வாரத்தில் 3 நாட்களாகச் சுருங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.