`ஸ்டாலின் என்ன சாதனை செய்தார்?' - தூத்துக்குடியில் கறார் காட்டிய முதல்வர் பழனிச்சாமி
By Nivetha | Galatta | Nov 11, 2020, 04:50 pm
தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்து வருவதால், வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்திற்கு வந்து பணிபுரிய ஆர்வம் கொண்டுள்ள சூழ்நிலையில், பல தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மீண்டும் வெளிமாநிலத் தொழிலாளர்களை பணியமர்த்தி வருகிறார்கள் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசினார் முதல்வர்.
மாவட்டந்தோறும் சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மாவட்டம் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறார். விவசாய சங்க பிரதிநிதிகள், சிறு குறு நடுத்தர தொழில் கூட்டமைப்பினர் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினருடன் கலந்தாய்வு நடத்தி அவர்களது குறைகளை முதலமைச்சர் கேட்டு வருகிறார்.
நேற்று வரை 26 மாவட்டங்களில் ஆய்வு நடத்திய முதலமைச்சர் இன்று 27வது மாவட்டமாக தூத்துக்குடியில் ஆய்வு நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்தார். ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், அரசு எடுத்த தீவிர நடவடிக்கைகள் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து உள்ளது என்றார். இதனையடுத்துடுத்து செய்தியாளர்கள் முதல்வரிடம் பல்வேறு கேள்வி எழுப்பினர். அதற்கு முதலமைச்சர் புள்ளி விவரங்களுடன் பதிலளித்தார்.
அப்படியாக, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினின் கண்டனங்கள் குறித்த கேள்விக்கு விடையளித்த போது,
``போலி விவசாயி யார், உண்மையான விவசாயி யார் என்பதை எப்படி கண்டுபிடிப்பது? வேளாண்மையை பற்றி ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? விவசாயிகளை அவர் கொச்சைப்படுத்துகிறார். தூத்துக்குடிக்கு வந்த அவர் பதநீர் குடித்திருக்கிறார். இனிப்பாக இருப்பதை பார்த்து இதில் சர்க்கரை கலந்து இருக்கிறதா? என்று கேட்டிருக்கிறார். அவர் அப்படிப்பட்டவர். அப்படித்தான் சொல்வார்.
விவசாயம் என்றால் என்ன? எப்படி இருக்கும்? என்று என்னை கேட்டால் தெரியும். அவருக்கு என்ன தெரியும். என்ன தொழில் செய்கிறார் என்று அவருக்கே தெரியாது. எந்த தொழிலும் செய்யாமலேயே பிழைப்பு நடத்தும் ஒரே தலைவர் ஸ்டாலின் தான். எனக்கு விவசாயம் இருக்கிறது. அவருக்கு என்ன தொழில் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு தொழில் உண்டு. அவருக்கு என்ன தொழில் என்று கேட்டால் அவர் என்ன சொல்வார்? என்னைப் பொறுத்தவரை நான் அரசியலில் இருந்தாலும் எனக்கு முதன்மையான தொழில் வேளாண் தொழில் தான். எங்கள் பகுதியில் போய் என்னைப் பற்றி கேட்டால் சிறுவயது முதலேயே நான் விவசாயம் செய்து வருகிறேன் என்று சொல்வார்கள். நான் கடுமையாக உழைத்தவன். எனவே உழைப்பு பற்றி அவர் சர்டிபிகேட் கொடுத்து பரிசோதனை செய்ய தேவையில்லை.
வேளாண் மக்களுக்கு செய்த உதவியால் தான் இன்று தமிழகத்திற்கு பல்வேறு தேசிய விருதுகள் கிடைத்து உள்ளன. நீர் மேலாண்மையில் தமிழகம் முதல் மாநிலமாக வந்து இன்று தேசிய விருதை பெற்று இருக்கிறோம். வேளாண் துறையை சேர்ந்த ஒருவர் முதலமைச்சரராக வந்ததால் தான் இது முடிந்தது.
குடிமராமத்து திட்டம் யார் கொண்டு வந்தது? இவர்களது ஆட்சியிலா கொண்டு வந்தார்கள்? தடுப்பணைகளை கட்டியது யார்? இவர்களது ஆட்சியிலா கட்டினார்கள்? இவர்கள் என்ன செய்தார்கள்? நீர் பற்றாக்குறையை சமாளிக்க காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை கொண்டு வர இருக்கிறோம். கேரள முதலமைச்சருடன் பேசி நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண இருக்கிறோம். சென்னை மாநகர குடிநீர் பிரச்சினையை சமாளிக்க நடவடிக்கையை எடுத்து இருக்கிறோம். சென்னைக்கு கிருஷ்ணா நீர் கொண்டு வருவதற்காக ஆந்திர முதல்வருடன் நேரடியாக பேச்சு நடத்தி 10 டி.எம்.சி. தண்ணீரை வாங்கி இருக்கிறோம். இது வரலாற்று சாதனை.
இதுவரை 8 டி.எம்.சி. தண்ணீர் தான் வந்தது. ஆனால் இப்போது நாங்கள் 10 டி.எம்.சி. தண்ணீரை வாங்கி இருக்கிறோம். சென்னை மாநகரத்தில் தங்கு தடையின்றி குடிநீர் வழங்கி வருகிறோம். இதுபோன்று ஏராளமான திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறோம். குடிமராமத்து திட்டம், தடுப்பணைகள் கட்டியது, சாலை பணிகள், ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்து சாதனை படைத்து இருக்கிறோம். எந்த மாநிலத்தில் இதை செய்திருக்கிறார்கள்? 11 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்று பணிகள் துவங்கி இருக்கிறது.
இந்த மருத்துவ கல்லூரிகள் மூலம் 1650 எம்.பி.பி.எஸ். இடங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய சாதனை அல்லவா? நான் முதலமைச்சராக பொறுப்பு ஏற்ற பின் 6 சட்ட கல்லூரிகளை துவக்கி இருக்கிறேன். ஸ்டாலின் என்ன சாதனை படைத்தார்?
இன்று கூட ஸ்டாலின் ஸ்டெர்லைட் ஆலை சம்பவம் குறித்து கூறியிருக்கிறார். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு நூற்றுக்கு நூறு ஸ்டாலின் தான் காரணம். அவர் தொழில் அமைச்சராக இருந்தார். அதனை மறந்து விட்டு பேசுகிறார். எடப்பாடிக்கு ஒன்றுமே தெரியாது என்று நினைக்கிறார். ஸ்டாலின் பேசிய பேச்சுக்கள் எல்லாம் சட்டசபை குறிப்புகளில் இருக்கிறது. இதனை பத்திரிகையாளர்கள், ஊடக நண்பர்கள் பார்க்கலாம்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்து அவரே கையெழுத்து போட்டிருக்கிறார். இதற்கு மேல் என்ன வேண்டும். வாயை திறந்தால் பொய் சொல்கிறார். அது மட்டுமல்ல, இந்த ஆலைக்கு 1500 கோடி ரூபாய் செலவிடப்படும் என்ற செய்தியையும் அவர் கூறியிருக்கிறார். இதற்கு எல்லாம் ஆதாரம் இருக்கிறது. அவர் சொல்வது எல்லாம் பொய். செய்வதை எல்லாம் அவர் செய்து விட்டு எங்கள் மீது பழி போடுகிறார். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு நூற்றுக்கு நூறு ஸ்டாலின் தான் காரணம்" என்று காட்டமாக பதிலளித்தார் முதல்வர்.