ஆன்லைன் பாடம் புரியாததால் தற்கொலை செய்த மாணவன்! - ஆன்லைன் கல்விக்கு வருமா நெறிமுறைகள்?
By Madhalai Aron | Galatta | Sep 02, 2020, 03:15 pm
ஒவ்வோர் ஆண்டும் புதிய கல்வி ஆண்டான ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். கரோனா பரவல் காரணமாக மார்ச் 16-ம் தேதி மூடப்பட்ட பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இப்போதுவரை திறக்கப்படவில்லை. மாற்று ஏற்பாடாக பெரும்பாலான அனைத்துத் தனியார் பள்ளிகளும் தங்களின் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன.
இதற்கிடையே நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகின. இருப்பினும் டிசம்பர் 2020 வரை பள்ளிகள் திறக்கக்கூடாது என மத்திய அரசு அறிவித்தியுள்லது, இந்நிலையில், தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. இதனால், பள்ளிகள் திறக்கப்படுவது குறித்துப் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்ந்து கவலை எழுப்பி வருகின்றனர்.
குறிப்பாக ஆன்லைன் வகுப்புகளுக்கான புரிதல் இன்னமும் மாணவர்கள் மத்தியில் முழுமையாக வரவில்லை. அனைத்தையும் முதல் நாள் அனுகுவது போலவே அவர்கள் அனுகி வருகின்றனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கரட்டுப்பட்டியில் இணைய வழி பாடம் புரியாததால் மன உளைச்சலில் இருந்த பிளஸ் 1 மாணவர் புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இப்படியான நிலையில், இன்றைய தினம் கரட்டுப்பட்டியைச் சேர்ந்த இளங்கோவன், ஜோதி ஆகியோர் மகன் விக்கிரபாண்டி(16). இவர், திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். தற்போது பள்ளி நிர்வாகம் சார்பில் விக்கிரபாண்டிக்கு இணைய வழியில் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதில் விக்கிரபாண்டி ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார் என சொல்லப்படுகிறது.
இதனை தனது தந்தை கண்டித்ததாலும், இணைய வழி பாடங்கள் புரியாததாலும் மன உளைச்சலில் இருந்த விக்கிரபாண்டி, வீட்டில் தனிமையில் இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து க.விலக்கு காவல் நிலைய காவலர்கள் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஏற்கெனவே கோவையை சேர்ந்த 19 வயது சுபஸ்ரீ என்ற மாணவி நீட் தேர்வு பயம் காரணமாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அதேபோல் தேனியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் ஆன்லைன் பாடங்கள் புரியாததால் பெற்றோர் திட்டியதால் தற்கொலை செய்து கொண்டார். அந்த நேரத்தில் இவஇ குறித்து கருத்து கூறிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின், ``அரசே கல்வி கொலைகளை செய்து வருகிறது" என்றும், ``நீட் குறித்தான அச்சத்தால் கோவையில் மாணவி சுபஶ்ரீ தற்கொலை செய்து கொண்டுள்ளார். அனிதாவில் தொடங்கிய மரணம் சுபஶ்ரீ வரை தொடர்கிறது. அரசே நடத்தும் கல்விக் கொலைகள் இவை!" என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகளை அரசு முறையாக வகுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அரசு விரைவில் இதுதொடர்பாக பேசும் என எதிர்ப்பார்க்கவும்படுகிறது.