சசிகலாவுக்கு எதிராக அதிமுக கூட்டத்தில் தீர்மானம்! சசிகலாவுடன் தொடர்பில் இருந்தால் அதிமுகவில் இருந்து உடனடி நீக்கம்!!
சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்களிடம் தொடர்ச்சியாகப் பேசி வரும் ஆடியோ தான், அதிமுகவிற்கு தற்போது பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களிடையே சசிகலா பேசும் ஆடியோக்கள் ஒன்றன் பின் ஒன்றாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி, அதிமுகவினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. இதனால், அதிமுகவை மீண்டும் சசிகலா கைப்பற்றப் போகிறரா? என்கிற கேள்வியும் எழுந்து உள்ளது.
இப்படியான சூழ்நிலையில்,கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த எம்எல்ஏ கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக அதிரடியாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதாவது, “அதிமுக சட்ட திட்டங்களுக்கு மாறாகவும், இயக்கத்தின் லட்சியங்களுக்கு எதிராகவும் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தயவு தாட்சன்யமின்றி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் படி, சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.பி. உள்பட மொத்தம் 16 பேர் அதிமுக வில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.
குறிப்பாக, அதிமுக வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் புகழேந்தியும் அதிரடியாக நீக்கப்பட்டார்.
ஆனாலும், இதனைப் பற்றி துளியும் கவலைப்படாத சசிகலா, அதிமுக தொண்டர்களிடையே தொடர்ந்து பேசி வருகிறார். அது தொடர்பான ஆடியோக்கள் தொடர்ச்சியாக வெளியான வண்ணம் உள்ளன.
இந்த நிலையில், அதிமுக சார்பில் மாவட்டந்தோறும் கூட்டம் கூட்டப்பட்டு சசிகலாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
அதன் படி, விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக கூட்டம் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, “அதிமுக குறித்து பேச சசிகலாவுக்கு தகுதியில்லை” என்று, சி.வி.சண்முகம் ஆவேசமாகப் பேசினார்.
இதே போல், சேலத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் சசிகலாவுக்கு எத்ராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சேலம் ஓமலூரில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்தார்.
குறிப்பாக, “சசிகலாவுடன் தொடர்பில் இருந்தால் அதிமுகவில் இருந்து உடனடி நீக்கம் செய்யப்படுவார்கள்” என்றும், அவர் கடுமையாக எச்சரிக்கை விடுத்தார்.