``குடும்ப கட்சி - அறிக்கை நாயகன் - கனிமொழிக்கு பார்வையில் கோளாறு" - திமுகவை விமர்சிக்கும் முதல்வர்!
By Nivetha | Galatta | Dec 03, 2020, 06:27 pm
சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிசம்பர் 3) ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் ராமன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, திமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்.
``திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்று வருவதாக வேண்டுமென்றே திட்டமிட்டு நாள்தோறும் அறிக்கை வெளியிட்டு அவதூறு பரப்பி வருகிறார். அவரது அறிக்கை வெளி வராத நாளே இல்லை. அவரை அறிக்கை நாயகன் என்றே சொல்லலாம். வீட்டிலேயே இருந்துகொண்டு வேண்டுமென்றே அவதூறு பரப்பி வருகிறார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி திமுக கொள்ளையடித்த கட்சி. தமிழகத்தின் ஒட்டு மொத்த பட்ஜெட் தொகையான ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்தது திமுக தான். அவருடைய கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு 2 ஜி அலைக்கற்றை ஊழல் நிகழ்ந்துள்ளது. அவருடைய குடும்ப தொலைக்காட்சிக்கு 200 கோடி ஊழலில் கைமாறி உள்ளது. மெகா ஊழல் செய்துவிட்டு புத்தர், அரிச்சந்திரன் போல் பேசி வரும் திமுக தலைவர் ஸ்டாலின் விரைவில் 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிக்குவார்.
அதிமுக ஆட்சியில் எங்கும் சிறு தவறு கூட நடைபெறாத வகையில் உலக வங்கி விதிமுறைப்படி ஆன்லைன் முறையில் டெண்டர் விடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வது உலக வங்கி தான். இதில் தவறு ஏதும் செய்துவிட முடியாது. ஆனால் திமுக ஆட்சியில் ஒப்பந்தம் விடப்படும் போது நூறு கோடிக்கு விடப்பட்டால் பணி முடிந்த பின்பு ரூ.172 கோடிக்கு தொகை வழங்கும் அளவிற்கு 72 சதவீதம் அதிகமான தொகையை சேர்த்து ஊழல் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து ஆதாரத்தை விரைவில் நீதிமன்றத்தில் ஒப்படைப்போம். ஆட்சி கிடைக்கவில்லை என்பதால் திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து குறை சொல்லி வருகிறார். ஊழலில் திளைத்த ஸ்டாலின் அதிமுக ஆட்சி குறித்து கூற எந்த தகுதியும் அருகதையும் இல்லாதவர்.
திமுக ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட 230 கோடிக்கு ஒப்பந்தம் போட்டுவிட்டு கட்டட பணிகள் முடிவுற்ற போது 410 கோடிக்கு செலவு நடைபெற்றதாக பணத்தை வழங்கியுள்ளனர். மீத்தேன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை போட்டது ஸ்டாலின் தான் என்பதை மறுக்க முடியாது. அதை நான் தான் தடுத்து நிறுத்தி உள்ளேன். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளோம். திமுக ஆட்சிக்காலத்தில் காவிரி பிரச்சினைக்கு எந்தவித தீர்வும் காணப்படவில்லை. நீர் மேலாண்மையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
சிறப்பான நிர்வாகம் காரணமாகவே அனைத்து துறைகளிலும் தமிழகம் அகில இந்திய அளவில் முதல் இடம் பிடித்து பல்வேறு விருதுகளை பெற்று வருகிறது. பவானிசாகர் அணையில் இருந்து பவானி வரை ஆறு தடுப்பணைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 100 இடங்களில் மினி கிளினிக் தொடங்கப்படும்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எடப்பாடி தொகுதியில் பிரசாரத்தை தொடங்கி எடப்பாடியில் எதுவும் செய்யவில்லை என குற்றம் சொல்லி இருக்கிறார். எடப்பாடி தொகுதியில் அரசு கலைக்கல்லூரி, அரசு பல தொழில்நுட்ப கல்லூரி, குடிநீர் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். மாதம் தவறாமல் எடப்பாடி தொகுதிக்கு வந்து நிறைவேற்றிய திட்டங்களை தொடங்கி வைத்துள்ளேன்.
உடன் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி வருகிறேன். இவை எல்லாம் கண்ணில் தெரியாத அளவிற்கு பச்சை பொய் கூறும் கனிமொழிக்கு பார்வையில் கோளாறு உள்ளது. திமுக குடும்ப கட்சி வாரிசு கட்சி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். கார்ப்பரேட் கட்சியான திமுகவின் பெரிய தலைவர்கள் உள்ள நிலையில் இப்போது வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது"
என கடுமையாக திமுக மீது விமர்சனங்கள் வைத்திருக்கிறார்!