தமிழகத்தில் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் தெரியுமா?
By Aruvi | Galatta | May 15, 2020, 12:11 pm
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முழுவதும் முடிந்த பின்னரே கல்லூரிகள் திறக்கப்படும் என்று, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கைக்குப் பதில் சொல்லும் வகையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்பாக எடுத்தேன், கவிழ்த்தேன் என எந்த முடிவும் எடுக்க முடியாது” என்று குறிப்பிட்டார்.
“கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் கொரோனா தொற்று ஏற்பட்டதும், அரசு துரிதமாக செயல்பட்டு அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் முடிவு எடுத்தது என்றும், இதில் காய்கறிகள் விளைவிக்கும் விவசாயிகளின் நலன் மற்றும் பொதுமக்களுக்கு எளிதாகக் காய்கறிகள் கிடைப்பதையும் உறுதி செய்யும் வகையிலேயே” நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும்” அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
குறிப்பாக, “கோயம்பேடு மார்க்கெட்டை 3 இடங்களில் சந்தையைப் பிரித்து வைக்குமாறு கூறியதாகவும், இது தொடர்பாக வியாபாரிகள் பிரதிநிதிகளுடன் துணை முதல்வரும் பேசினார் என்றும், கோயம்பேடு சந்தையை 5 நாட்களில் மாற்றி அமைத்ததாகவும்” ஜெயக்குமார் கூறினார்.
மேலும், “பிரசாந்த் கிஷோர் எழுதிக் கொடுப்பதைத் தினமும் ஸ்டாலின் வாசித்து வருகிறார் என்று தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘ஒன்றிணைவோம் வா’ திட்டம் கூட, பிரஷாந்த் கிஷோரின் திட்டம் தான் என்றும் சுட்டிக்காட்டினார்.
“தமிழக அரசு ஜெட் வேகத்தில் செயல்பட்டு வருவதை, ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும், அதனால்தான் அவர் அரசைக் குறைகூறி வருவதாகவும், அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.
அத்துடன், “தாழ்த்தப்பட்டவர்களை அவமதிக்கும் வகையில் தயாநிதி மாறன் பேசியதற்கு” அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார். !
மேலும், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், “தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முழுவதும் முடிந்த பின்னரே கல்லூரிகள் திறக்கப்படும்” என்று தெரிவித்தார்.
“தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்கியுள்ள கல்லூரிகளில் தூய்மைப்பணி முடிந்த பிறகே வகுப்புகள் தொடங்கும்” என்றும், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
இதனிடையே, “அரசின் திட்டங்களில் அரசியல் செய்வது சரியல்ல” என்று அமைச்சர் உதயகுமார், எதிர்கட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.