சட்டமன்றத் தேர்தலுக்காக ஐ-பேக் நிறுவனத்துடன் கைகோர்த்த திமுக!
By Madhalai Aron | Galatta | Jul 28, 2020, 06:17 pm
வருகிற 2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலைச் சந்திப்பதற்காக, பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடன் இணைந்துள்ளது திமுக. சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்தி வருகிறது ஐ-பேக் டீம். திமுகவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு இருக்கிறது. எனினும், இந்த எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்துவதற்காக ஐ-பேக் டீம், திமுக மாணவர் அணியோடு கைகோர்த்துச் செயல்படத் தொடங்கியுள்ளது. இதன் மூலம், திமுகவில் மாணவர்கள், இளைஞர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டம் உள்ளதாக கூறப்படுகிறது.
இதன், முதல் கட்டமாக ஜூலை 25-ம் தேதி பகல் 12.00 முதல் 1.30 மணி வரையில் ஐ-பேக் டீம் நிர்வாகி ரிஷி தலைமையில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. திமுக மாணவர் அணிச் செயலாளர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர்கள், பொருளாளர் என 11 மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள். அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகியவை பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு மாநில நிர்வாகி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர்களிடம் பேசிய ஐ-பேக் டீம் நிர்வாகிகள், ‘தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியார் மற்றும் அரசு கலைக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ எனச் சராசரியாக 25 கல்வி நிறுவனங்களாவது இருக்கின்றன. புதிதாகப் பிரிக்கப்பட்டது உட்பட தற்போது 38 மாவட்டங்கள் உள்ளன. ஒரு கல்லூரிக்கு 25 மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களின் செல்போன் எண், எந்த குரூப் படிக்கிறார்கள், குடும்பப் பின்னணி என்ன உட்பட முழு விவரங்களையும் சேகரியுங்கள்’ என்று அசைன்மென்ட் கொடுத்துள்ளார்கள்.
இதன் மூலம் 20,000 மாணவர்களைப் புதிதாக திமுகவில் இணைக்கலாம். திமுகவின் செயல்பாடுகள் குறித்து புரியவைத்து, அவர்களுக்குப் பயிற்சி அளித்து, திமுகவின் ஐடி விங்கில் அவர்களைச் செயல்பட வைப்பதுதான் ஐ-பேக்கின் திட்டம். இதுபோலவே, ஒவ்வொரு பகுதியிலும் இளைஞர்களைத் தேர்வு செய்து இளைஞர் அணியைப் பலப்படுத்தத் திட்டமிட்டுள்ளது ஐ-பேக் டீம். இந்த நிலையில் கிராமம் கிராமமாக இளைஞரணிக்குப் புதிய நிர்வாகிகளை நியமிப்பதற்கான பணிகள் தற்போதே ஆரம்பமாகிவிட்டது.
அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியைப் பலப்படுத்த 25,000 இளைஞர்களுக்கு, 25,000 ஆண்ட்ராட்டு போன்களை அதிமுக தலைமை கொள்முதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதே வேளையில் திமுகவும் தனது ஐடி விங்கைப் பலப்படுத்த தொடங்கியுள்ளது, தற்போதே சட்டமன்றத் தேர்தல் ஜுரம் ஆரம்பமாகிவிட்டதையே காட்டுகிறது.
மேலும், கடந்த 2011 தேர்தலில் கடைசியாக திமுக – பாமக கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதன் பிறகு பாமக, திமுக கூட்டணிக்கு வரத்தயாராக இல்லை. 2014, 2016 மற்றும் 2019 தேர்தல்களில பாமக கூட்டணிக்கு திமுக தயாராகவே இருந்தது. ஆனாலும் இந்த மூன்று தேர்தல்களிலும் பாமகவால் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை. தங்கள் வாக்கு வங்கியை மட்டுமே அதிகரிக்க முடிந்தது. அதிமுக கூட்டணியில் பாமக எதிர்பார்ப்பதை விட அதிகமாகவே கிடைக்கிறது. ஆனாலும் வெற்றி கிடைக்கவில்லை. இதனை அடிப்படையாக கொண்டு, வரும் சட்டமன்றத் தேர்தலில், திமுக பாமக-வுடன் கைக்கோர்க்கும் என்ற பேச்சும் எழுந்துள்ளது.