``கிராமப்புறங்களில் சிறிய வீடுகளை கட்டுவோரை அலைக்கழிக்கிறது மின்வாரியம்" - கனிமொழி குற்றச்சாட்டு
By Madhalai Aron | Galatta | Oct 08, 2020, 06:13 pm
``கட்டுமான பணி நிறைவு சான்று இல்லாமல் மின் இணைப்பு அளிக்கப்படாது என்ற ஆணையை நீக்கியது ஏன்?" என திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ``மின்இணைப்பு தொடர்பான ஆணையை தமிழக அரசு அவசரமாக நீக்க வேண்டியதன் அவசியம் என்ன?" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் அவர்.
தமிழகத்தில் புதிய கட்டடங்கள் கட்டும்போது, மின் இணைப்பு பெற, ‘கட்டுமான பணி நிறைவு சான்று’ பெற வேண்டியது அவசியம் என்று தமிழ்நாடு மின்சா"ர வாரியம், ஆணை பிறப்பித்தது. ஆனால் தமிழக அரசு இந்த ஆணையை சமீபத்தில் ரத்து செய்வதாக அறிவித்தது.
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துதான், கனிமொழி தற்போது கருத்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள பதிவில், “கட்டுமான பணி நிறைவு சான்று' இல்லாமல் மின் இணைப்பு அளிக்கப்பட மாட்டாது என்ற ஆணையை தமிழக அரசு அவசரமாக நீக்க வேண்டி அவசியம் என்ன? இந்த விதியையும் நீக்கினால் அனுமதியை மீறி கட்டிடம் கட்டுவோருக்கு என்ன தண்டனை? ஆட்சி முடிய இன்னும் ஆறே மாதங்கள் இருப்பதால் அதற்குள் வசூலை அதிகரிக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா?" என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், நகர்ப்புறங்களில் விதிகளை மீறி கட்டிடம் கட்டுவோருக்கு வசதி செய்து கொடுக்கும் மின்வாரியம், கிராமப்புறங்களில் சிறிய வீடுகளை கட்டுவோரை அலைக்கழிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், `நகர்ப்புறங்களில் விதிகளை மீறி கட்டிடம் கட்டுவோருக்கு வசதி செய்து கொடுக்கும் மின்வாரியம், கிராமப்புறங்களில் சிறிய வீடுகளை கட்டுவோரை அலைக்கழிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளதாக' கனிமொழி குற்றம்சாட்டி உள்ளார்.
மின் வாரியம் தொடர்பாக இப்படியான குற்றச்சாட்டுகளும், அதற்கான எதிர் விமர்சனங்களும் வந்துக்கொண்டிருக்கும் இதே நேரத்தில், மின் கட்டண கணக்கீடு முறை தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனுவில், ``கடந்த மே மாதம் 4ம் தேதி மின் வாரியம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில் மின் பயன்பாட்டை கணக்கிட முடியாத மாதங்களுக்கு முந்தைய மாத 'பில்' தொகையை செலுத்தும்படி கூறப்பட்டுள்ளது. நிலைமை சீரானதும் மொத்தமாக நான்கு மாதங்களுக்கான மின் பயன்பாட்டை கணக்கிட்டு அதை இரண்டாக பிரித்து ஏற்கனவே செலுத்தப்பட்ட தொகையை கழித்து மீதி தொகை வசூலிக்கப்படும்" என கூறப்பட்டுள்ளது.
மேலும் ``நான்கு மாதங்களுக்கு மொத்தமாக கணக்கீடு செய்தால் குறைந்த அழுத்த மின்சாரத்தை பயன்படுத்துபவர்கள் 12 முதல் 14 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதாகிறது.எனவே மின் வாரிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.முதல் இரண்டு மாதங்களுக்கான மின் பயன்பாட்டின் அடிப்படையில் கட்டணத்தை தனியாகவும் அடுத்த இரண்டு மாதங்களுக்கான மின் பயன்பாட்டை கணக்கிட்டு கட்டணத்தை தனியாகவும் வசூலிக்க வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு 'கட்டணம் கணக்கிடும் முறையில் குற்றம் காண முடியாது. கூடுதல் கட்டணம் விதித்திருப்பதாக தெரிய வந்தால் சட்டப்படி நுகர்வோர் நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம்' என உத்தரவிட்டது.இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி எம்.எல்.ரவி மனு தாக்கல் செய்தார். மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.