2 நாட்களில் மாவட்ட அளவில் பேருந்துகளை இயக்க வாய்ப்பு!
By Aruvi | Galatta | May 16, 2020, 11:34 am
2 நாட்களில் மாவட்ட அளவில் பேருந்துகளை இயக்க வாய்ப்பு உள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு 3 வது முறையாக நீட்டிக்கப்பட்ட நிலையில், நாளையுடன், நிறைவடைகிறது.
இதனிடையே, 4 வது முறையாக நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும், ஆனால் பல தளர்வுகள் இருக்கும் என்றும், கடந்த வாரம் பிரதமர் மோடி கூறியிருந்தார்.
மேலும், 3 வது ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், தமிழகத்தில் மதுக்கடைகள், டீ கடைகள் திறப்பது உள்ளிட்ட பல்வேறு விசயங்களுக்காக தளர்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வரும் 18 ஆம் தேதியுடன் 4 வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் இருக்கம் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டு வந்தது.
அதன்படி, இன்னும் 2 நாட்களில் மாவட்ட அளவில் பேருந்துகளை இயக்க வாய்ப்பு இருப்பதாகப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக, போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “கோவை, சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனோ இல்லா மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மாவட்டங்களுக்கு விரைவில் குறைந்த அளவிலான போக்குவரத்து சேவையைத் தொடங்க ஆலோசித்து வருவதாகவும்” கூறினார்.
அதன்படி, “குறைவான நோய்த்தொற்று இருக்கக்கூடிய மாவட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பேருந்துகளை இயக்க திட்டமிட்டிருப்பதாகவும், ஆனால் அதிக பாதிப்பு கொண்ட சென்னை போன்ற நகரங்களுக்குப் பேருந்து சேவை முற்றிலும் இருக்காது” என்றும், அவர் குறிப்பிட்டார்.
“இது தொடர்பாக, இன்னும் 2 நாட்களில் அது குறித்த அறிவிப்பு முறைப்படி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும்” அந்த அதிகாரி தெரிவித்தார்.