தமிழகத்தில் 1 முதல் 9 ம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் 50 சதவீதமாக குறைக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் இறுதி வாரம் முதல் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, பள்ளி - கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் தற்போது வரை மூடப்பட்டு உள்ளன. இதனால், தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், ஆன்லைன் வகுப்புகள் மூலமாக தற்போது மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும், கொரோனா வைரஸ் பரவலால் காரணமாக பள்ளிகள் திறப்பில் தற்போது வரை தாமதம் ஏற்பட்டு வருவதால், பள்ளிக் கல்வி முன்னாள் ஆணையர் தலைமையிலான குழுவின் பரிந்துரைப்படி 40 சதவீதம் வரை பாடத்திட்டத்தைக் குறைக்கப் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது. அதன் படி, எஸ்.சி.இ.ஆர்.டி. சார்பில் பாட அளவு குறைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த அறிவிப்பு வெளியாகி 2 மாதங்களாகியும், பாட அளவு குறைப்பு சார்ந்த விவரங்களைப் பள்ளிக் கல்வித் துறை இது வரை வெளியிடவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், மாணவர்களுக்கான கற்பித்தல் பணிகளை மேற்கொள்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகப் புகார்கள் தொடர்ச்சியாக எழுந்து உள்ளன.

அத்துடன், சி.பி.எஸ்.இ., கேந்திரிய வித்யாலயா உட்பட மத்திய வாரியப் பள்ளிகள் 30 சதவீத அளவுக்கு பாடங்களை குறைத்து, அதன் முழு விவரங்களையும் கடந்த ஜூலை மாதமே வெளியிட்டன. அந்த வழிகாட்டுதலைப் பின்பற்றி சி.பி.எஸ்.இ., கே.வி. பள்ளிகள் பாடங்களை நடத்தி வருகின்றன. 

எனினும், மாநிலப் பள்ளிக் கல்வி வாரியத்தின் சார்பில் குறைக்கப்பட்ட பாடங்களின் விவரங்களை இது வரை தமிழக அரசு வெளியிடவில்லை. இதன் காரணமாக மாணவர்களுக்கு எந்தெந்தப் பாடங்களை நடத்துவது என்ற குழப்பம் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்து உள்ளது. 

அதே நேரத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை ஏற்கனவே பாடத்திட்டங்கள் 40 சதவீதம் அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தான், பாடத்திட்டங்களை தற்போது 40 சதவீதத்திலிருந்து, 50 சதவீதமாக குறைப்பதற்குப் பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்த ஒரு விரிவான அறிக்கையைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், வரும் 30 ஆம் தேதி திங்களன்று காலை தமிழக முதலமைச்சரிடம் சமர்ப்பிக்க உள்ளார். அதன் பிறகு, தமிழக முதலமைச்சரின் ஒப்புதலோடு இந்த பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்த அரசாணை வெளியாக இருக்கின்றது. மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பணிகளில் தொய்வு ஏற்படாது இருக்கும் நிலையில், இப்படி ஒரு முடிவைப் பள்ளிக் கல்வித்துறை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், “பாடத்திட்டம் குறைப்பு குறித்த அறிக்கை நாளை மறுநாள் முதல்வரிடம் வழங்கப்படும்” என்று, குறிப்பிட்டு உள்ளார்.
 
“முதல்வரிடம் அறிக்கை அளித்த அடுத்த 5 நாளில் பாடத்திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும், அரையாண்டு தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும் என்ற தகவல் தவறானது” என்றும், அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.