“மாணவர்களின் பாகுபலியே... அரியரை வென்ற அரசனே..!” முதலமைச்சரை புகழ்ந்து தள்ளும் மாணவர்கள்.. வைரல் போஸ்டர்கள்..
By Aruvi | Galatta | Sep 02, 2020, 04:42 pm
“மாணவர்களின் பாகுபலியே... அரியரை வென்ற அரசனே..” என்று, முதலமைச்சர் பழனிசாமியை பாகுபலியோடு ஒப்பிட்டுப் புகழ்ந்து தள்ளும் வகையில் மாணவர்கள் போஸ்டர்கள் ஒட்டிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனா என்னும் பெருந் தொற்றால், தமிழகத்தின் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்து முதலமைச்சர் பழனிசாமி அதிரடியாக உத்தரவிட்டார்.
அதே நேரத்தில், கல்லூரிகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களின் நிலை என்ன? என்று கேள்விகள் எழுந்தது. இதனால், உயர் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி, “கல்லூரி இறுதி பருவத் தேர்வு தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்த நிலையில், அரியர் வைத்திருந்த மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ்” என்றும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக, கல்லூரிகளில் பல காலமாக அரியர் வைத்திருந்த மாணவர்கள் அனைவரும் “அப்பாடா” என்று, நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதனால், அரியர் வைத்திருந்த மாணவர்கள் அனைவரும் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லாமல் போனது.
பல மாணவர்கள், “நாமெல்லாம் டிகிரியை முடிப்போமா? நாமும் மற்றவர்களைப் போல், நம் பெயருக்குப் பின்னால் ஒரே ஒரு டிகிரியாவது போடமாட்டோமா?” என்று ஏங்கித் தவித்த வந்த மாணவர்கள் எல்லாம், ஆனந்த தாண்டவம் ஆடினர்.
இதனையடுத்து, “அரியர் வைத்திருந்த மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ்” என்று அறிவித்த முதலமைச்சர் பழனிசாமியை பாராட்டி, இணையத்தில் இளைஞர்கள் மீம்ஸ்களை தெறிக்கவிட்டனர். அந்த மீம்ஸ்களை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு நாகையில் சிலர் இளைஞர்கள் இணைந்து, “அரியர் மாணவர்களின் அரசனே.. ஐயா எடப்பாடியாரே.. அரியர் பாஸ் பண்ண வைத்ததற்கு நன்றி அய்யா” என்று, கடந்த வாரம் கட்டவுட் வைத்தனர்.
பல மாணவர்கள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் முதலமைச்சரைப் புகழ்ந்து பதிவுகளைத் தொடர்ந்து பதிவு செய்து வந்தனர். சில மாணவர்கள் மட்டும் ஒன்று சேர்ந்து முதலமைச்சரை புகழ்ந்து தங்களது பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டி வந்தனர்.
இந்நிலையில், திண்டுக்கல் நகர் முழுவதும் தமிழக முதலமைச்சரை பாராட்டி மாணவர்கள் பலரும் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றர்.
அந்த போஸ்டர்களில் தமிழக முதலமைச்சருக்கு நன்றி சொல்லும் விதமாக, அவரை புகழ்ந்த பாராட்டி உள்ள மாணவர்கள், “ 'மாணவர்களின் பாகுபலியே..!' என்றும், 'அரியரை வென்ற அரசனே..!' போன்ற வாசகங்கள் இடம் பெற்று உள்ளன.
அதே போல், கோவை மாநகரிலும் முதலமைச்சர் பழனிசாமியை புகழ்ந்து தள்ளி மாணவர்கள் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர். அந்த போஸ்டர்களில், “ 'மாணவர்களின் ஒளி விளக்கே..!', 'மாணவர்களின் கல்விக் கடவுளே..! எங்கள் ஓட்டு உங்களுக்கே ஐயா' ” என்றும், மாணவர்கள் தங்களது மகிழ்ச்சியையும், நன்றியையும் வெளிப்படுத்தி உள்ளனர். இதனால், மாணவர்கள் முதலமைச்சரை புகழ்ந்து ஒட்டி உள்ள இந்த போஸ்டர்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.