கே.சி. வீரமணி வீட்டில் “9 சொகுசு கார்கள், 5 கிலோ தங்கம், ரூ.34 லட்சம் பணம் பறிமுதல்” கிடைத்தது என்னென்ன?
முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி. வீரமணி வீட்டில் நடந்த சோதனையில், 'ரோல்ஸ் ராய்ஸ் உட்பட 9 சொகுசு கார்கள், 5 கிலோ தங்கம், 34 லட்சம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக” தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுக ஆட்சியில் வணிகவரி துறை அமைச்சராக இருந்த கே.சி. வீரமணி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.
இந்த குற்றச்சாட்டின் பேரில், அவரது வீட்டில் நேற்று காலை 6.30 மணி முதல், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வந்தனர்.
அதாவது, கே.சி வீரமணி வருமானத்திற்கு அதிகமாக ரூ.90 கோடி சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
அதன் படி, சென்னை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கே.சி. வீரமணிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது உறவினர்கள் இடங்கள் என மொத்தம் 35 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தினார்கள்.
மேலும், “ஜோலார்பேட்டை இடையம் பட்டியில் உள்ள வீரமணிக்கு சொந்தமான திருமண மண்டபம், அவரது வீடு” ஆகியவற்றிலும் இந்த சோதனையானது நடைபெற்றது.
இவற்றுடன், திருப்பத்தூரில் உள்ள அவருக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டல் ஒன்றிலும் தீவிரமாக இந்த சோதனை நடத்தப்பட்டது.
குறிப்பாக, கே.சி. வீரமணிக்கு சொந்தமான ஏலகிரி மலையில் உள்ள பங்களா மற்றும் அவருடைய மனைவிக்கு சொந்தமான இடங்கள் என்று பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலிசார் நடத்திய சோதனையில், “ரோல்ஸ் ராய்ஸ் உட்பட 9 சொகுசு கார்கள், 5 கிலோ தங்கம், 34 லட்சம் ரொக்கம் பணம் மற்றும் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக” தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன் படி, 34,01,060 ரூபாய் மற்றும் 1,80,000 ரூபாய் மதிப்பிலான அன்னிய செலாவாணி டாலர், ஒரு ரோல்ஸ் ராய்ல்ஸ் கார் உட்பட 9 சொகுசு கார்கள், 4.987 கிலோ கிராம் தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ கிராம் வெள்ளி பொருட்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், 5 கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்குகள், சொத்துக்கள் சம்மந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள் என இந்த வழக்கில் தொடர்புடைய பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக, கே.சி.வீரமணியின் வீட்டு வளாகத்தில் தோராயமாக 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான சுமார் 275 யூனிட் மணல் குவித்து வைக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.
இது குறித்து, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.