புரெவி புயல் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. 

தமிழகத்தில் தற்போது வட கிழக்கு பருவ மழை மிக தீவிரம் அடைந்து இருக்கிறது. கடந்த மாதம் 24 ஆம் தேதி வங்க கடலில் உருவான நிவர் புயல் காரணமாக, தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. 

அதன் தொடர்ச்சியாக வங்க கடலில் தற்போது நிலைகொண்டு உள்ள புரெவி புயல் காரணமாக, தமிழக கடலோர பகுதிகள் மற்றும் வட மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.

அதன் படி, தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, புனல்வாசல், , அதிராம்பட்டினம், உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து 4 நாட்களாகப் பெய்து வரும் கன மழையால், அந்த பகுதியில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி உள்ளதோடு, பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி உள்ளன.

அதே போல் திருவாரூர், குடவாசல், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி நாகை, வேதாரண்யம், தலைஞாயிறு, கோடியக்கரை, ஆயக்காரன்புலம், மயிலாடுதுறை, குத்தாலம், மங்கைநல்லூர், மணல்மேடு, செம்பனார்கோவில், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக, இந்த பகுதிகளில் பயிரிடப்பட்டு உள்ள இளம் பயிர்கள் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கியதால், விவசாயிகள் முற்றிலும் கலக்கம் அடைந்து உள்ளனர்.

3 நாட்களாக விடாமல் பெய்து வரும் கனமழையால் சீர்காழியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும், கனமழை காரணமாக டெல்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. பல இடங்களில் மக்கள் நடமாட்டம் இன்றி, சாலைகளில் வெறிச்சோடி காணப்படுகின்றன.
 
அது போல், வங்க கடலில் உருவான புரெவி புயல் வலுவிழந்து, தற்போது தாழ்வு மண்டலமாக நிலைக்கொண்டு இருந்தாலும் தமிழகத்தில் அடுத்த 2 
நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்றும், வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

கனமழை எதிரொலியாக காரைக்காலில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக கனமழைக்கு பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

முக்கியமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. சென்னையில் மீனம்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாலையில் மிதமான மழை பெய்தது.

அதே போல், அடுத்த 12 மணி நேரத்தில் புரெவி புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது என்றும், இதனால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கடந்த 30 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது என்றும், ராமநாதபுரத்திற்கு தென்மேற்கே கடந்த 24 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது, அடுத்த 6 மணி முதல் 12 மணி நேரத்தில் வலு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறும் என்றும், இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

இதனிடையே, தமிழகத்தில் புயல் சேதங்களை ஆய்வு செய்ய மத்தியக் குழு இன்று மதியம் சென்னை வர உள்ளது குறிப்பிடத்தக்கது.