“பாஜகவுடன் கூட்டணி வைத்ததே தேர்தல் தோல்விக்கு காரணம்” - சி.வி. சண்முகம் தடாலடி
“பாஜகவுடன் கூட்டணி வைத்ததே தேர்தல் தோல்விக்கு காரணம், அதனால் தான் சிறுபான்மையினர் வாக்குகளை இழக்க நேரிட்டது” என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றிய அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டமான, வானூர் பகுதியில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், “திமுக ஆட்சிக்கு வரவேண்டும் எனப் பெருவாரியான மக்கள் விருப்பப்பட்டு வாக்களிக்கவில்லை” என்று, குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “நாம் 3 வது முறையாக ஆட்சியில் அமர்ந்திருப்போம் என்றும், ஆனால், நாம் தோல்வியடைந்ததற்கு காரணம் பாஜக கூட்டணி தான்” என்றும், அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
அத்துடன், “பாஜக கூட்டணியால், நாம் முழுமையாக சிறுபான்மையினர் வாக்குகளை இழந்து விட்டோம் என்றும், சிறுபான்மையினருக்கு நம் மீதோ, நமது கட்சியின் மீதோ, நமது பத்தாண்டு கால ஆட்சியின் மீதோ எந்த கோபமும் வருத்தமும் இல்லை” என்றும், அவர் கூறினார்.
மேலும், “சிறுபான்மையினர் பாஜகவுடன் கொள்கை ரீதியாக முரண்பட்டு இருந்தார்கள் என்றும், அந்த சமயத்தில், நாம் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தோல்வியைத் சந்தித்தோம்” என்றும், அவர் குறிப்பிட்டு பேசினார்.
“அதற்கு உதாரணமாக, நான் போட்டியிட்ட விழுப்புரம் தொகுதியில் 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் நான் தோல்வியைத் தழுவினேன் என்றும், விழுப்புரம் பகுதியில் 16 ஆயிரம் சிறுபான்மையினர் வாக்குகள் இருக்கிறது என்றும், அதில் 300 வாக்குகள் கூட நமக்கு வரவில்லை” என்றும், அவர் பேசினார்.
முக்கியமாக, “திமுக மக்களை ஏமாற்றி பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றுள்ளது என்றும், நாம் பலமான எதிர்க்கட்சியாக அமர்ந்து உள்ளோம் என்றும், இதனால் வரும் உள்ளாட்சித் தேர்தலில் அனைவரும் சுறுசுறுப்புடனும், ஒற்றுமையுடனும் செயல்பட வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே, “பாஜக குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கூறிய கருத்து கூட்டணியில் சண்டை ஏற்படுத்தும் முயற்சி என்றும், இதற்கு அதிமுக தலைமை பதில் அளிக்க வேண்டும்” என்றும், பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் வலியுறுத்தி உள்ளார்.
மேலும், “பாஜக வுடன் கூட்டணி என தெரிந்துதான் தேர்தலில் நின்றார் என்றும், தேர்தலில் தோற்ற பிறகு பாஜக மீது குற்றம்சாட்டுவது ஏற்க முடியாது என்றும் பேசிய அவர், இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை நிர்வாகிகள் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் கண்டிப்பாக இதற்கு பதில் அளிக்க வேண்டும் என்றும், அப்போது தான் இதற்கு குழப்பம் இல்லாமல் இருக்கும்” என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார்.