கொரோனா பாதிப்பு.. உலக அளவில் இந்தியா 4 வது இடம்..
By Aruvi | Galatta | Jun 12, 2020, 11:04 am
உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 4 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது, நாட்டு மக்களை கடும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
உலகமே அஞ்சி நடுங்கும் ஒரு மாபெரும் தொற்று நோயாக இருக்கிறது கொரோனா என்னும் கொடிய நோய். இதனால், மனித உயிர் இழப்புகள் தொடங்கி, ஏழை எளியோரின் வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்தும் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்து உள்ளன.
இதனிடையே, உலகிலேயே கொரோனாவுக்கு அதிக பட்சமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில், 2,089,701 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு, இதுவரை 116,034 பேர் கொரோனாவால் உயிரிழந்தள்ளனர்.
இந்த பட்டியலில் 2 வது இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் இதுவரை 805,649 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 41,058 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
பட்டியலில் 3 வது இடத்தில் உள்ள ரஷ்யாவில் இதுவரை 502,436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,532 ஆக அதிகரித்துள்ளது.
இந்த பட்டியலின் 4 வது வரிசையில் தற்போது இந்தியா இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் இதுவரை 298,283 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 8,502 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கடந்த மே 24 ஆம் தேதி, உலக அளவில் கொரோனா பாதிப்பில் 10 வது இடத்திலிருந்த இந்தியா, அடுத்த 18 நாட்களில் முன்னேறி கொரோனா அதிகம் பாதித்த உலக நாடுகள் வரிசையில் தற்போது 4 வது இடத்திற்கு இந்தியா முன்னேறி உள்ளது, நாட்டு மக்களை கடும் பீதியில் ஆழ்த்தி உள்ளது.
குறிப்பாக, கடந்த 10 நாட்களும் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் தலா 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகளை இந்தியா சந்தித்து வருகிறது.
ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தற்போது 7,597,562 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 423,846 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், கொரோனா பாதிப்பிலிருந்து உலகம் முழுவதும் இதுவரை 3,842,204 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனிடையே, உலகையே ஆட்டி படைக்கும் கொரோனா என்னும் பெருந்தொற்றின் பிடியிலிருந்து இதுவரை நியூசிலாந்து, தான்சானியா, சீசெல்ஸ் உள்ளிட்ட 9 நாடுகள் முழுமையாக மீண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.