நித்தியானந்தா சொத்துக்களை முடக்க அதிரடி உத்தரவு!
By Aruvi | Galatta | 05:57 PM
நாடு முழுவதும் உள்ள நித்தியானந்தா சொத்துக்களை முடக்க நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக சர்ச்சைக்குரிய வகையில் நித்தியானந்தாவின் பெயர் அதிகம் உச்சரிக்கப்பட்டு வருகிறது.
நித்தியானந்தாவை சுற்றியும், அவரது ஆசிரமத்திலும் சட்டவிரோதமாக பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுவதும், பின்பு மறைவதும் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இதனிடையே, சர்ச்சைகளுக்குப் பெயர் போன நித்தியானந்தா மீது பாலியல் புகார்கள், ஆள் கடத்தல், மோசடி வழக்குகள் என பல்வேறு வழக்குகள் வரிசை கட்டி நிற்கின்றன.
ஆனால், இதில் ஒன்றில்கூட நித்தியானந்தா நீதிமன்றத்தில் ஆஜராகாமல், வெளிநாட்டில் மறைந்து வாழ்ந்து, தனது பக்தர்களுக்காக ஆன்லைன் மூலம் சத்சங்கம் நிகழ்ச்சியில் சொற்பொழிவு நிகழ்த்தி வருகிறார்.
இதனால், நித்தியானந்தாவுக்கு எதிராக 'புளு கார்னர்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர் தேடப்பட்டு வருகிறார்.
மேலும், நித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள பெண்களை, நித்தியானந்தா பாலியல் பலாத்காரம் செய்ததாக லெனின் கருப்பன் பெங்களூரு ராம்நகர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நித்தியானந்தாவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
ஆனால், அவர் இருக்கும் இடம் கண்டுப்பிடிக்க முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர். இதனால், நித்தியானந்தாவை கைது செய்ய முடியவில்லை.
இந்த வழக்கு, பெங்களூரு ராம்நகர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “நாடு முழுவதும் உள்ள நித்தியானந்தா சொத்துக்களை முடக்க” அதிரடியாக உத்தரவிட்டனர்.
மேலும், “நித்தியானந்தாவின் சொத்து பட்டியலை வரும் 23 ஆம் தேதிக்குள் அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதற்குள் நித்தியானந்தா ஆஜராகவில்லை என்றால், இந்தியா முழுவதும் உள்ள நித்தியானந்தாவின் சொத்துக்களை முடக்க வேண்டும்” என்றும் நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர்.