தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் 12 ஆக உயர்வு! இந்தியாவில் 492 ஆக உயர்வு!!
By Aruvi | Galatta | 10:13 AM
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவில் 492 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த மத்திய - மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
அதன்படி, இன்று மாலை 6 மணி முதல், வரும் 31 ஆம் தேதி வரை தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழகத்தில் சென்னை, மதுரை திருப்பூரில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாகவும்” தெரிவித்தார்.
குறிப்பாக, “லண்டனிலிருந்து திரும்பி வந்த சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், மற்றொருவர் லண்டனிலிருந்து திரும்பி வந்த திருப்பூரைச் சேர்ந்த 48 வயதானவர் என்றும், அவர் தற்போது திருப்பூரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்றும் கூறினார்.
மேலும், “மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த 54 வயதானவர், அங்குள்ள ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரை எந்த வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களுக்கும் சென்றுவரவில்லை என்றும் குறிப்பிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், இந்த 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றும் தெரிவித்தார்.
அத்துடன், “வீட்டில் தனிமையாக இருங்கள் என்பது வேண்டுகோள் அல்ல, அரசின் உத்தரவு” என்றும், “தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அதிகம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டி அடையாளப்படுத்தப்படுகிறது என்றும், இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கவனம் மற்றும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டார்.
அதேபோல், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 492 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாகக் கேரளாவில் 92 பேரும், மகாராஷ்டிராவில் 101 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.