கொரோனா குறைந்து வரும் நாடுகளில் 2வது அலை வீசும்! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
By Aruvi | Galatta | May 26, 2020, 05:26 pm
கொரோனா குறைந்து வரும் நாடுகளில் உடனடியாக 2 வது அலையை எதிர்கொள்ள நேரக்கூடும் என்று, உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இறப்ப விகிதம் முற்றிலும் குறைந்துள்ளதாகவும், இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இப்படியாக உலகின் பல நாடுகளிலும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து குறையத் தொடங்கி உள்ளதாகவும், இதனால், அந்தந்த நாடுகளில் தற்போது உள்ள ஊரடங்கு காலம் விரையில் தளர்த்தப்படும் என்றும், இதனால் விரையில் இயல்பு நிலை திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இது தொடர்பாகப் பேசிய உலக சுகாதார அமைப்பின் அவசரநிலைத் தலைவர் டாக்டர் மைக் ரியான், “ உலகின் சில நாடுகளில் கொரோனாவின் பிடி சற்று தளர்ந்தாலும் தென் அமெரிக்கா, மற்றும் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றின் வேகம் தற்போது மேலும் அதிகரித்திருப்பதாக” குறிப்பிட்டார்.
“உலகம் முழுவதும் கொரோனா வைரசின் முதல் அலையை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மிக விரைவில் நீக்கப்பட்டால், தொற்று விகிதங்கள் மீண்டும் விரைவாக உயர வாய்ப்புள்ளது” என்றும், டாக்டர் மைக் ரியான் கவலைத் தெரிவித்தார்.
“கொரோனா வைரஸ் நோய் எந்த நேரத்திலும் உயரக்கூடும் என்பதை நாம் அறிந்திருப்பது அவசியம் என்றும், கொரோனா தொற்று தற்போது குறைந்து கொண்டே வருவதால், அது தொடர்ந்து குறைந்து கொண்டே போகும் என்று நாம் ஊகிக்க முடியாது” என்றும் அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.
“ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் உள்ள நாடுகள் பொது சுகாதாரம், சமூக நடவடிக்கைகள், கண்காணிப்பு நடவடிக்கைகள், சோதனை நடவடிக்கைகள் மற்றும் நோய் தொடர்ந்து குறைவதை உறுதி செய்வதற்கான விரிவான யுக்தியைத் தொடர்ந்து அமலில் வைக்க வேண்டும்” என்றும், டாக்டர் மைக் ரியான் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.
குறிப்பாக, “கொரோனாவின் 2 ஆம் கட்ட ஆட்டத்தை எதிர்கொள்ள அனைவரும் தயாராக வேண்டும்” என்று அனைத்து உலக நாடுகளையும், உலக சுகாதார அமைப்பின் அவசரநிலைத் தலைவர் டாக்டர் மைக் ரியான், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிவுறுத்தி உள்ளார்.
கொரோனாவின் முதல் கட்ட தொற்று பாதிப்பிலிருந்து இன்னும் முழுவதுமாக மீள முடியாத சூழலில், உலக சுகாதாரத்துறையின் இந்த எச்சரிக்கை, ஒட்டுமொத்த உலக நாட்களையும் கலக்கம் அடையச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.