கட்டிப்பிடிக்க.. முத்தமிட கடும் கட்டுப்பாடு!
By Aruvi | Galatta | 05:36 PM
கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக, யாரும் யாரையும் கட்டிப்பிடிக்க வேண்டாம், முத்தமிட வேண்டாம் என்றும் பல்வேறு நாடுகளும் அறிவுறுத்தி வருகின்றன.
சீனாவில் உருவாகி, இன்று உலகம் முழுக்க அண்டார்க்டிகாவைத் தவிர 6 கண்டங்களைச் சேர்ந்த 76 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொரோனா வைரஸ்க்கு, இதுவரை சுமார் 3 ஆயிரத்து 119 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், சீனாவில் மட்டும் சுமார் 2 ஆயிரத்து 750 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சீனாவில் தற்போது மேலும் 31 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதேபோல், கொரோனா வைரஸ்க்கு தற்போது 90 ஆயிரத்து 443 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்குப் பின் 48 ஆயிரத்து 128 பேர் மீண்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக, அமெரிக்காவில் சுமார் 102 பேர் கொரானா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால், அந்நாட்டின் சுகாதாரத்துறை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த, அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பிரபல சமூகவலைத்தளமான டிவிட்டர், தனது பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே பணிகளைக் கவனிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், கொரோனா வைரஸ், காய்ச்சல் போன்ற பருவகால தொற்று நோயாக மாறக்கூடும் என்றும், இந்த வைரஸ் ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் வரும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இதனிடையே, கொரோனா வைரஸ்லிருந்து தற்காத்துக்கொள்வதற்காக, பல நாடுகளும் தொடர்ந்து புதிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதன்படி, பல்வேறு நாடுகளும் தற்போது புதிதாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“பொதுமக்கள் கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக, யாரும் யாரையும் கட்டிப்பிடிக்க வேண்டாம், முத்தமிட வேண்டாம், கை குலுக்க வேண்டாம்” என்றும் அறிவுறுத்தி புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஜெர்மனியில் அரசுத்துறை சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அந்நாட்டின் உள்துறை அமைச்சருக்கு, உயர் பதவியில் உள்ள ஒரு பெண், மரியாதை நிமித்தமாகக் கைகுலுக்கத் தனது கையை நீட்டினார். ஆனால், அமைச்சர் கொரோனா பாதுகாப்பு காரணமாக, கை கொடுக்காமல், தலையை மட்டும் அசைத்து மரியாதை செய்தார். இதனால், அந்த இடமே சிரிப்பலையால் அதிர்ந்தது. தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.