அமெரிக்காவில் ஏப்ரல் 30 வரை சமூக விலகல் நீட்டிப்பு!
By Aruvi | Galatta | 12:36 PM
கொரோனா பாதிப்பால், அமெரிக்காவில் சமூக விலகல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலகளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனிடையே, சீனாவில் கொரோவை வைரஸ் தொன்றிதாக கூறப்பட்டாலும், அந்நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது சற்று குறைந்துள்ளது. அதே நேரத்தில், உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா கடந்த வாரமே முதலிடத்திற்கு வந்தது.
இதன் காரணமாக, அமெரிக்காவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,475 ஆக தற்போது அதிகரித்துள்ளது. அமெரிக்காவில், நேற்று ஒரே நாளில் 255 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்தனர். அத்துடன், நேற்று ஒரே நாளில் புதிதாக 18,276 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனால், அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 854 பேராக உயர்ந்துள்ளது.
இதனிடையே, நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு அடுத்த 2 வாரங்களில் மேலும் அதிகரிக்கும்” என்று அதிர்ச்சியைக் கிளப்பினார்.
குறிப்பாக, “ஏப்ரல் 12 ஆம் தேதி வரை அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும், அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கையை 2 லட்சத்துக்குள் கட்டுப்படுத்தினாலேயே பெரிய விசயம் என்றும்” அவர் குறிப்பிட்டார்.
“அமெரிக்காவில் புயல் வேகத்தில் கொரோனா பரவும் என்பதால், சமூக விலகலுக்கான நடைமுறைகளை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது" என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். இதனால், அமெரிக்க மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.