தமிழகத்தில் 5,409 பேர் கொரோனாவால் பாதிப்பு! சென்னையில் உச்சபட்ச பாதிப்பில் கோடம்பாக்கம்
By Aruvi | Galatta | May 08, 2020, 05:25 pm
தமிழகத்தில் 5,409 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் உச்சபட்ச பாதிப்பில் கோடம்பாக்கம் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.
கிருஷ்ணகிரி அருகே கொரோனா தடுப்பு பணியின்போது லாரி மோதிய விபத்தில் மரணமடைந்த தலைமைக்காவலர் சேட்டு குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தடுப்புக்காகக் கூடுதலாக 2,750 செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த முதல்வர் பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளார். இந்த 2,570 செவிலியர்களும் 6 மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 530 மருத்துவர்கள், 2,323 செவிலியர்கள், 1,508 ஆய்வக நுட்புனர்கள், 2,715 சுகாதார ஆய்வாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும், கொரோனா காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு மார்க்கெட்டிற்கு பதிலாக, சென்னையை அடுத்த திருமழிசையில் தயாராகி வரும் தற்காலிக புதிய மார்க்கெட், வரும் 10 ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என சி.எம்.டி.ஏ. தெரிவித்துள்ளது.
இதனிடையே, சென்னையின் 3 மண்டலங்களில் 400 யை கடந்து, கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதில், சென்னையில் அதிகபட்சமாக கோடம்பாக்கம் பகுதி, கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக மாறி உள்ளது.
சென்னை கோடம்பாக்கம் பகுதியில் 400 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கோடம்பாக்கம் பகுதியில் மட்டும் 22 இடங்கள் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் சென்னை மாநகராட்சி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
அதேபோல் திரு.வி.க.நகர், ராயபுரம் மண்டலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 400 யை கடந்ததுள்ளது.
சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 62.78 சதவீதம் ஆண்கள் என்றும், 37.18 சதவீதம் பேர் பெண்கள் என்றும், திருநங்கை இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் கடந்த 6 நாட்களில் மட்டும் 2,190 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில், சென்னையில் மட்டும் 40.4 சதவிகிதம் பேர் பேருக்கு, கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் இதுவரை 2,647 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மேலும் 62 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த மாவட்டத்தில் 254 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், கோயம்பேடு சந்தையிலிருந்து தருமபுரி திரும்பிய 5 தொழிலாளர்களில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தருமபுரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
ஒட்டுமொத்தமாகத் தமிழகம் முழுவதும் இதுவரை 5,409 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், இதுவரை 37 பேர் வரை கொரேனாவால் உயிரிழந்துள்ளனர்.