தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2,323.. உயிரிழப்பு 27 ஆக உயர்வு..!
By Aruvi | Galatta | May 01, 2020, 11:45 am
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இதுவரை 2,323 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதே நேரத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
கரூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரூரில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
மதுரையில் இன்று மட்டும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பிலிருந்து கரூர் மீண்ட நிலையில், இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
சென்னை கோயம்பேட்டில் பணிபுரிந்து யாரும் திருச்சி வந்தால், உடனடியாக தகவல் தரவேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாகத் தூத்துக்குடி தற்போது மாறியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் 27 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே 25 பேர் குணமடைந்துள்ளனர். அங்கு ஒருவர் உயிரிழந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடைசிப் பெண்ணும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
சிதம்பரத்தில் கொரோனா பாதித்த 2 வயது குழந்தை உள்பட 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
சீர்காழி அருகே கொரோனா தொற்றால் சீல்வைக்கபட்ட பகுதியில் வங்கி மற்றும் ஏடிஎம் மையங்கள் முடங்கியதால், பணம் எடுக்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இவர்களில், 97 பேர் ஆண்கள், 64 பேர் பெண்கள் என்பதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்களில் 138 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனால், தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,323 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆக உள்ளது. இதுவரை தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1258 ஆக
உயர்ந்துள்ளது.
இதனிடையே, நெல்லை மாவட்டத்தில் இதுவரை 144 தடை உத்தரவை மீறி, காரணம் இல்லாமல் வெளியே சுற்றித் திரிந்த 5,208 நபர்கள் மீது, 3,633 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து 3,591 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நெல்லை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.