தமிழகத்தில் 10,108 பேர் கொரோனாவால் பாதிப்பு! பலி 71 ஆக உயர்வு
By Aruvi | Galatta | May 16, 2020, 03:00 pm
தமிழகத்தில் கொரோனாவல் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,108 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் கொரோனா பரவல் தாக்கம் காரணமாக, இதுவரை 3 முறை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்ட நிலையில், நாளையுடன் அந்த ஊரடங்கு முடிகிறது. ஆனால், கொரோனாவின் தாக்கம் சற்றும் குறைந்ததாகத் தெரியவில்லை.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அந்த மாவட்டத்தில் 362 ஆக அதிகரித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்ற பரவல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு வந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 176 ஆக உயர்ந்து உள்ளது.
தென்காசி மாவட்டத்திலும் இன்று மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால், தென்காசியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 60 ஆக உயர்வடைந்துள்ளது.
கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட இந்த 2 மாவட்டங்களையும் சேர்ந்த 48 பேரையும், நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்துக் கண்காணித்து வருகின்றனர். இவர்களுடன் தொடர்பிலிருந்த அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து மேலும் 2 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செவிலியர்கள், அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், கடலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள மதுக்கடைக்கு டோக்கனை கலர் ஜெராக்ஸ் எடுத்துப் பயன்படுத்த முயன்ற 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஒட்டுமொத்தமாகத் தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,108 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், இதுவரை 2,599 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இதன் மூலம், இந்திய அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் பட்டியலில், தமிழகம் தற்போது மீண்டும் 2 வது இடத்திற்கு வந்துள்ளது, தமிழக மக்களை கடும் பீதியில் ஆழ்த்தி உள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 4.78 லட்சம் பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 3.94 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை ஊரடங்கு விதியை மீறியவர்களிடமிருந்து 5.75 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.