தமிழகத்தில் 1,755 கொரோனாவால் பாதிப்பு! பலி 22
By Aruvi | Galatta | Apr 25, 2020, 01:04 pm
தமிழகத்தில் புதிதாக 72 பேருக்கு கொரோனா தொற்று உறதி செய்யப்பட்டதை அடுத்துப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,755 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூரில் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திலும் நாளை முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம் நகராட்சிகள், 5 பேரூராட்சிகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 26 ஆம் தேதி காலை 6 மணி முதல், ஏப்ரல் 29 ஆம் தேதி இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், புனிததோமையார் மலை ஊராட்சி ஒன்றியம், கோவிலம்பாக்கம் உட்பட 15 கிராம ஊராட்சிகளிலும் இந்த முழு ஊரடங்கு அடங்கும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆவடி மாநகராட்சி, பூவிருந்தவல்லி நகராட்சி, மீஞ்சூர், பொன்னேரி, நாரவாரிக்குப்பம், திருமழிசை, திருநின்றவூர் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் வில்லிவாக்கம் ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து 13 கிராம பஞ்சாயத்துகளுக்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், புழல் ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து 7 கிராம பஞ்சாயத்துக்களும், பூவிருந்தமல்லி ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் நாளை ஒருநாள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு, மாவட்டம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் கிருமிநாசினி தெளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, நாளை முதல் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு, இன்று ஒருநாள் மட்டும் கடைகளின் நேரத்தை மாலை வரை நீட்டிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து, முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இடங்களில் இன்று மட்டும் அத்தியாவசிய பொருட்களின் கடைகள் 3 மணிவரை திறந்திருக்க அனுமதி அளித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் இன்று மட்டும் காய்கறி, மளிகைக் கடைகள் பிற்பகல் 3 மணி வரை திறந்திருக்கச் சென்னை காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.
இந்நிலையில், "சமூக பரவலாகக் கூடாது என்பதற்காகத்தான் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் உயிர் தான் அரசுக்கு முக்கியம்" என்றும், அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
அதேபோல், தமிழகத்திலேயே அதிகபட்சமாகச் சென்னையில் கொரோனா தாக்கம் அதிக அளவில் உள்ள நிலையில், சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 133 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஆவடி அருகே செங்கல் சூளையில் பணிபுரியும் வடமாநில இளைஞருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருடன் பணிபுரியும் 52 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
ஈரோட்டில், தாய்லாந்திருந்து சுற்றுலா விசாவில் வந்து கொரோனாவை பரப்பியதாகக் கைதான 6 பேருக்கு, வரும் 30 ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில், தேவையில்லாமல் வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த 2 பேர், இன்று முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ஒட்டுமொத்தமாகத் தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,755 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.