தமிழ்நாட்டில் தொட்டு விடும் தூரத்தில் கொரனா!
By Aruvi | Galatta | 11:23 AM
தமிழ்நாட்டில் தொட்டு விடும் தூரத்தில் கொரனா வைரஸ் இருப்பதாகப் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சீனாவில் உருவான கொரனா வைரஸ்க்கு இதுவரை அங்கு 361 பேருக்கு மேல் உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்துடன் பல ஆயிரம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக 27 நாடுகளில் இந்த வைரஸ் நோய் பரவியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்தந்த நாடுகளின் அரசுகள், தீவிரமாக நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், கொரனா வைரஸ்சால் கேரளாவில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வைரஸ் தமிழ்நாட்டிலும் பரவ வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டது.
இதனிடையே, சீனாவிலிருந்து வந்த 646 பேர் உள்பட, வெவ்வெரு நாடுகளிலிருந்து தமிழகம் திரும்பிய 799 பேர், தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
அதேபோல், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள 12 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என்றும் அவர் கூறினார்.
அத்துடன், இதுவரை தமிழகத்தில் யாருக்கும் கொரனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
ஆனால், சீனாவிலிருந்து திருவாரூர் திரும்பிய நபருக்குக் காய்ச்சல் ஏற்பட்டதால், அவருக்கு கொரனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. திருவாரூர் அரசு மருத்துவமனை கொரோனா பிரிவில் வைத்து பரிசோதனை செய்யப்பட்டு, அவர் தொடர் கண்காணிப்பில் உள்ளார்.
அதேபோல், சீனாவிலிருந்து விழுப்புரம் திரும்பிய இளம்பெண் ஒருவருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என கண்டறியப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைத்து, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளார்.
மேலும், சீனா, சிங்கப்பூரிலிருந்து தமிழகம் வந்த 4 பேருக்கு காய்ச்சல் இருந்ததால், சென்னை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைகளில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு, தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
கொரனா வைரஸ் தொடர்பான சோதனை ஆய்வுக் கூடம், சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் நிறுவன சோதனை மையத்திலேயே ஆய்வு செய்யும் வகையில், அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, தமிழ்நாட்டில் தொட்டு விடும் தூரத்தில் கொரனா வைரஸ் இருப்பதால், பொதுமக்கள் அச்சத்தில் உரைந்துள்ளனர்.